ஹரிஸ்ணவியின் கொiயைகண்டித்து வவுனியா மற்றும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டங்கள்

vavuniastudentrapedemoவவுனியாவில் ஹரிஸ்ணவி என்ற 13 வயது மாணவி வீட்டில் தனிமையில் இருந்த போது இனந்தெரியாதவர்களினால் பாலியல் குற்றம் புரியப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வவுனியா மற்றும் கிளிநொச்சி நகரங்களில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதியும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவும் கோரினார்கள்.வவுனியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏ9 நெடுஞ்சாலையை மறித்து வாகனப் போக்குவரத்தைத் தடைசெய்து சாலை மறியலும் நடத்தப்பட்டது,

வவுனியா பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் மதியம் ஒரு மணி நேரம் வகுப்புக்களைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சியில் கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கைகளைப் புறக்கணித்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சமூக வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பினர் இதற்கான அழைப்பை விடுத்திருந்தனர்.

வவுனியா மன்னார் வீதி காமினி மகாவித்தியாலயத்திற்கு எதிரில் இருந்து ஆரம்பமாகிய கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி கச்சேரி வாசலில் சென்று ஏ9 நெடுஞ்சலையில் சாலை மறிப்புப் போராட்டத்துடன் முடிவடைந்தது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வவுனியா அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் கையளிக்கப்பட்டது.

முகஜரைப் பெற்றுக்கொண்ட வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார, இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு கேட்டதாகவும் காவல்துறையினர் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை நடத்தி வருவதாகவும், கூறினார்.

இத்தகைய சம்பவங்கள் வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய சமூகக் குற்றங்களைத் தடுப்பதற்குப் பொதுமக்களும் தங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள். முல்லைத்தீவு மாவட்ட மகளிர் அமைப்பின் முக்கியஸதர்கள் மற்றும் வவனியா மாவட்ட மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.