செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கின்றோம் – நளினி
 
nalini‘எங்களின் கைகள் யாருடைய ரத்தத்தினாலும் நனைக்கப்படவே இல்லை’  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள கைதிகளான தாங்கள் யாரும் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என்று நளினி கூறியுள்ளார்.

ஒருநாள்-பரோலில் வெளியில் வந்திருந்த நளினி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

‘எங்கள் கைகள் யாரையும் கொலைசெய்யவில்லை…25 வருஷங்கள் அப்பாவிகளான நாங்கள் சிறையில் இருக்கிறோம்’ என்றும் கூறினார் நளினி.ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, கடந்த 25 ஆண்டு கால சிறைவாசத்தில் முதன்முறையாக பரோலில் வெளி வந்திருந்தார்.

நளினியின் தந்தை சங்கரநாரயணன் காலமானதை அடுத்து, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நளினிக்கு பரோல் வழங்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்தே நளினி இன்று புதன்கிழமை சென்னை கோட்டுர்புரம் வந்திருந்தார்.

அந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னையும், தன்னுடன் இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.
 
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுவிக்க, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் துணை நிற்க வேண்டும் என்றும் நளினி அப்போது குறிப்பிட்டிருந்தார். நளினியின் தந்தை சங்கரநாரயணன் நேற்று தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் காலமானார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு வசதியாக சங்கரநாராயணனின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அங்கே இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த இறுதி சடங்கில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

நளினி உள்ளிட்டோரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே பேரறிவாளனின் தந்தையும் தமிழாசிரியருமான குயில்தாசன் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதால், அவரை சென்று பார்ப்பதற்கு வசதியாக தன்னை பரோலில் வெளியில் செல்ல அனுமதிக்கப்படி கோரி, பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீது பல நாட்களாகியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.