வவுனியா மாணவி படுகொலை: வடக்கில் முழு கடையடைப்பு  ஹர்த்தால்

north_jaffnaஇலங்கையின் வடக்கே, வவுனியாவில் பள்ளி மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட கடையடைப்பினால் வடக்கு மாகாணத்தில் இன்று புதன்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்தக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகள் இயங்கவில்லை. அரச அலுவலகங்கள், வங்கிகள் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இயங்கின.தனியார் பேருந்து சேவைகள், முச்சக்கர வண்டிச் சேவை என்பனவும் பாதிக்கப்பட்டிருந்தன. அரச பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபட்டிருந்தன.

முhணவி கொலைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசேட குழுக்களை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய போதிலும், இதுவiரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

இலங்கையில் பள்ளிச் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் பல நடந்துள்ளன.

ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சட்டத்தினால் தண்டிக்கப்படுவதில் மெத்தனப் போக்கு காணப்படுவதாக இன்று கடையடைப்பில் ஈடுபட்டிருந்தவர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

காவல்துறையினர் இந்த சமூகக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதிலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதிலும் அக்கறை இன்றி செயற்படுகின்றார்களோ என்று சந்தேகம் வெளியிட்டுள்ள அவர்கள், மாகாணசபைக்கு காவல்துறை அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுமாயின், அவர்கள் பொறுப்போடும் சமூகப் பற்றோடும் செயற்பட்டு, இத்தகைய சமூகக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு வசதியாக இருக்கும் என் தெரிவித்திருக்கின்றனர்.