யாழ். பல்கலை: புதிய ஆடைக் கட்டுப்பாட்டு அறிவித்தலால் சர்ச்சை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், ‘கலாசாரத்தை’ பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள் முகச்சவரம் (க்ளீள் ஷேவ்) செய்திருக்க வேண்டும், ரீசேட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் கலைப்பீட அறிவித்தல் பலகைகளின் ஊடாக தெரிவிக்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
இந்த அறிவிப்புகள் தம்மைக் கட்டுப்படுத்துவதாக உள்ளதாக மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
யாழ். பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்களின் உடை மற்றும் அவர்களின் கலாசார பண்பாடு தொடர்பிலும் பல்கலைகழகத்திலும் சமூகத்திலும் வெளிப்பட்ட கரிசனையை அடுத்து, கலைப்பீட ஆசிரியர்கள் மட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ஞானகுமாரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இது கட்டாய விதிமுறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன், முஸ்லிம் மாணவர்கள் உட்பட யாரையும் வற்புறுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பெண்களை சேலை அணியச் சொல்லி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிவகாந்தன் தனுஜன், மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டி வருவதை மாணவ பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டபோதிலும் பிற கட்டுப்பாடுகள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்.
மாணவிகளை மாத்திரம் சேலை கட்டி வருமாறு கூறுவதை ஆணாதிக்க நடைமுறையாகக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
மாணவிகள் தரப்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவி டினோஷா ராஜேந்திரன், கிழமையில் ஒருநாள் சேலை அணிவது தொடர்பில் மாணவிகளிடம் எவரும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறினார்.
மாற்றுக் கட்சிகளின் முன்னாள் எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.கவில் சேர்ந்தனர்
தே.மு.தி.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.கவில் சேர்ந்தனர். நீண்ட காலமாகவே 10 பேரும் சட்டமன்றத்தில்அ.தி.மு.கவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்தனர்.
தே.மு.தி.கவைச் சேர்ந்த பாண்டியராஜன், அருண் பாண்டியன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட எட்டுப் பேர், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கலையரசு, புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி ஆகிய பத்துப் பேரும் இன்று அ.தி.மு.கவில் இணைந்ததாக அக்கட்சியின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வெற்றிபெற்றது. தமிழக சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாகவும் இருந்தது.
ஆனால், சில ஆண்டுகளிலேயே தே.மு.தி.கவைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தனர். இருந்தபோதும், அவர்கள் தே.மு.தி.கவிலேயே நீடித்தனர்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், இவர்கள் அனைவரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, தமிழக சட்டப் பேரவையில் தே.மு.தி.கவின் எதிர்க்கட்சி அந்தஸ்து பறிபோனது. அதேபோல, பா.ம.க., புதிய தமிழகம் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். இவர்கள் பத்து பேரும் தற்போது முறைப்படி அ.தி.மு.கவில் இணைந்துள்ளனர்.
ஆசிய பசிபிக் கடலில் கடற்படை வல்லமையை அதிகரிக்கும் ஆஸி; சீனா கோபம்
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தனது கடற்படையின் வல்லமையை பலப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் திட்டத்திற்கு சீனா கோபத்துடன் பதில் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறியுள்ள சீன வெளியுறவு அமைச்சு, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு இது எதிர்மறையானது என்றும் கூறியுள்ளார்.
பிராந்தியத்தில் ஒரு ஆயுதப் போட்டியை காண விரும்பவில்லை எனவும் சீனா கூறியுள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில், 140 பில்லியன் டாலர் நிதியை பாதுகாப்புக்காக செலவிடவுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது.
பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சவால்களை எதிர்கொள்ள, தனது நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது.
தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடற்பரப்பில் நிலவும் பதற்ற சூழ்நிலையையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவுக்குள் படையெடுத்து வரும் அகதிகள் தடுக்கப்படுவது ஏன்?
ஆஸ்திரியாவில் நடக்கும் குடியேறிகள் விவகாரம் குறித்த மாநாட்டுக்கு, தனக்கு அழைப்பு விடுக்கப்படாததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வரும் குடியேறிகளை தடுக்கத் தான் தவறிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கிரேக்கம் நிராகரித்துள்ளது.
இத்தோடு தொடர்புடைய இன்னொரு நிகழ்வாக கடந்த வாரம் தன் எல்லை ஊடாக வரும் குடியேறிகளின் எண்ணிக்கைக்கு ஆஸ்திரியா ஒரு கட்டுப்பாட்டை விதித்தது.
இது சட்டவிரோதமானது என்று ஐரோப்பிய ஆணைக்குழு எச்சரித்திருந்தது. ஆனாலும் ஐரோப்பா வரும் ஆப்கான் குடியேறிகள் பல இடங்களில் தடுக்கப்படுகிறார்கள். Read more