போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மகாநாடு -கொழும்பு

இலங்கை போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சங்கத்தின் மகாநாடு இன்று (26.02.2016) காலை குறித்த சங்கத்தின் தலைவர் திருமதி.விசாகா.தர்மதாச தலைமையில் கொழும்பு யூனியன் பிரதேச பகுதியில் அமைந்துள்ள கஜிக் கில்ட்டன் கொட்டலில் இடம் பெற்றது. இந்; நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர். இந்; நிகழ்வில் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி.விஜயகலா.மகேஸ்வரன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் திருமதி.கோமதி.இரவிதாஸ் உட்பட பல அரசியல் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வின் போது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், அவர்கள் 16 அம்சங்கள் மற்றும் சீர்திருத்த கோரிக்கைகளை போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்க தலைவி திருமதி.விசாகா.தர்மதாச அவர்களிடம் ஒப்படைத்தார். அங்கு ஒப்படைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு.தலைவர். போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கம்,
இல.09, ரிவர்டேல் பாதை, அணிவத்த, கண்டி.

அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பிலான விடயம்.

மேற்படி விடயம் தொடர்பில் தங்களுக்கு பின்வரும் கருத்துக்களை மிகவும் பணிவன்புடனும் கீழ்படிவுடனும் முன்வைக்க விரும்புகின்றேன்.
இந்த நாட்டின் சனத்தொகையில் சரிபாதி அளவினதாக பெண்கள் காணப்பட்ட நிலையிலும் இது வரையில் பெண்கள் தொடர்பில் சரியான சம அளவிலான சகல துறை சார் விடயங்களும் அடக்கப்பட வில்லை என்பது வெளிப்படையாக காணப்படும் ஓர் விடயம் ஆகும். காலத்திற்கு காலம் துறை சார் அமைச்சுக்கள் பல்வேறு தீர்மானங்களை முன் வைத்த போதும் அதன் நடை முறை விடயம் இது வரையில் இடம் பெறாத நிலை என்பது மிக வேதனையான ஓர் நிலையாகவே கருதுகின்றேன். இதற்கும் மேலாக அண்மைக்காலத்தில் இந்த நாட்டில் நல்லாட்சிக்கான ஒர் திறவுகோல் ஏற்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ள நிலையில் பின் வரும் விடயங்களை போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தினூடாக  முன் வைக்கின்றேன்.
• போரினால் இந்த நாட்டில் பாதிப்புற்று இன்றும் அவற்றில் இருந்து மீள முடியாத நிலையில் போரின் உடல் உள வடுக்களால் பாதிக்கப்பட்டு  தமது வாழ்வுக்கும் சமூக உரிமைக்காகவும் ஏங்கித் தவித்திருக்கும் ஒவ்வோர் உறவுகளுக்கும் உதவும் வகையில் ஓர் அமைச்சு உருவாக்கப்பட வேண்டும்.
• போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் அவர்களுக்கான வாழக்;கையின் அடிப்படை வசதிகளை பேணத்தக்க வகையில் அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு ஒன்றை அவர்களது ஆயுள் காலம் வரை வழங்கத்தக்கதாக பாராளுமன்றத்தில் புதிய சட்ட ஏற்பாடுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக  அவயவங்களை இழந்து அன்றாட தொழ்ல்களை புரிவதில் இயலாது நிலையில் உள்ளவர்கள் தொடர்பில் மிக முக்கியமான நடவடிக்கைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
• கடத்தப்பட்டு, மற்றும் காணாமற்போணேர் தொடர்பில் பாதிக்கப்பட்டு உள்ள பெண்கள் தொடர்பில் உரிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
• இறுதிக்கட்ட யுத்தத்தில் நேரடியாக பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றுவரை ஒப்படைக்கப்பட்டவர்கள் தொடர்பில் எது வித தொடர்பும் அற்ற நிலை காணப்படுகின்றது. இவ் விடயம் தொடர்பில்  உடனடியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
• சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் அவர்களது விடுதலையை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
• போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் தமது வாழ்வை நகர்த்தும் பொருட்டு தமது பிள்ளைகளை பாதுகாவலரிடம் ஒப்படைத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முயலும் பெண்கள் தொடர்பில் அவர்களுக்கு உரிய பயிற்சி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பணியகத்தினூடாக வழங்கி அதனூடாக இவ் நாட்டிலேயே பெருத்தமான தொழில்களையோ அன்றி சுயதொழில்களையோ ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
• போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்பில் அவர்களது பல்வேறு நிலைகளிலும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும் பொருட்டு நாடளாவிய நிலையில் மாகாணத்திற்கு ஒன்று வீதம் நலநோம்பு நிலையங்களையோ அன்றி காப்பகங்களையோ ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
• போரால் பாதிப்புக்கு உள்ளாகி இயலா நிலையில் உள்ள உறவுகளைத் தமது கவனிப்பிற்கு உட்படுத்தியுள்ள பெண்கள் தொடர்பில் உரிய வாழ்வாதார நடவடிக்கை அமுல்படுத்தப்பட வேண்டும்.
• பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் மீது இடம் பெற்றுவரும் மற்றும் இடம்பெற்றுவிட்ட வன்முறைகள் தொடர்பில் மிக இறுக்கமான சட்ட ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளும் பொருட்டு பாராளுமன்றத்தில் சட்ட ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
• போரால் பாதிப்புக்கு உள்ளாகி பல்வேறு துன்பங்களையும் அனுபவித்து வரம் சிறார்கட்கு மேலதிக வைத்திய உதவியின் பொருட்டு பாராளுமன்றத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
• நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில்  பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பிலான பணிகளை ஆற்றி வரும் உத்தியோகஸ்தர்கட்கு பிரச்சனைகளை உடனுக்குடன் ஆராய்ந்து உரிய தீர்வை உடன் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வசதிகளை மேலும் ஊக்குவிக்கத்தக்கதான வழி முறைகளை ஏற்பாடு செய்ய சட்டத்தின் ஊடாக ஒழுங்குகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேணடும்.
• நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள காவல் நிலையங்களில் பெண்களின் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு குறித்த பிரதேசத்தில் வழமையில் பெரும்பான்மையாக உள்ள மொழியினை தாய் மொழியாகவும் இரண்டாம் மொழியிலும் தேர்ச்சி உடைய பெண் காவல் உத்தியோகஸ்தர்களை நியமிக்கவும் அதே வேளை பெண்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் போது மூடிய கண்ணாடி அறையில் விசாரிக்கவும் சட்டத்தின் வாயிலாக ஏற்பாடுகள் மேற்கௌ;ளப்பட வேண்டும்.
•  வழமையான தேர்தல்களின் போது பெண்களுக்கான ஒதுக்கீடாக 40 வீத ஒதுக்கீடு அமைகின்ற அதே வேளையில் குறித்த 40 வீத ஒதுக்கீடுகளில் போரால் பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு 15 வீத ஒதுக்கீடு வழங்கவும் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியான தேர்தல்களின் போது பெறப்படுகின்ற போனஸ் ஒதுக்கீடுகளில் பெண்களுக்கு 50 வீத ஒதுக்கீடு வழங்கப்படும் அதே வேளை குறித்த ஒதுக்கீட்டில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக 20வீத ஒதுக்கீடு வழங்கப்பட சட்டத்தின் வாயிலாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதே வேளை நாட்டில் உள்ள ஒவ்வேர் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் மத்திய,மாவட்ட மற்றும் பிராந்திய நிர்வாகங்களில் 40 சதவீதம் பெண்கள் உள்வாங்கப்பட வழிவகை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ் நிர்வாகங்களிலும் போரால் பாதிப்புக்கு உள்ளான பென்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட வேண்டும்.
• அரச துறையில் பணியாற்றுபவர்களுக்கு பால் வேறுபாடு காட்டாமை போன்று தனியார் துறையிலும் கடமையாற்றும் பெண்களுக்கு ஊதியக் கொடுப்பனவுகளில் வேறுபாடுகாட்டாமை நிலையினை உருவாக்க சட்டத்தின் வாயிலாக ஏற்பாடுகள் இடம் பெற வழிவகை மேற்கொள்ளப்பட வேண்டும்.
• நாடளாவிய ரீதியாகவோ அன்றி மாகாண ரீதியாகவே போட்டிப் பரீட்சையின் வாயிலான தேர்வுகளின் போது மாற்று ஆற்றல் உள்ளவர்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் குறித்த வீதாசாரம் ஒதுக்கப்பட்டு தனித்துவமாக அவர்கள் உள்வாங்கப்படுவதற்கான நிலை சட்டத்தின் வாயிலாக உருவாக்கப்பட வேண்டும்.
• ஒவ்வேர் பிரதேச செயலக ரீதியிலும் போரால் பாதிப்புக்கு உள்ளான பென்கள் சங்கங்கள் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக குறித்த அமைப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் நிதிக்கூடாக சுயதொழில் மற்றும் கூட்டுறவு முயற்சிகளுக்கான ஆதரவினை பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் தங்களது மிக உயர்வான ஒத்துழைப்பினை எதிர்பார்கின்றேன்.

திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன்,
முன்னாள் தவிசாளர்;, வலி மேற்கு பிரதேச சபை