மீள்குடியேற்றம் குறித்து அமைச்சருடன் கூட்டமைப்பு பேச்சு-

tna (4)சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, வாழ்வாதாரம், ஏனைய கருத்திட்டங்கள், கைத்தொழில் அபிவிருத்தி உள்ளடங்களான பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஊடகப்பிரிவு அறிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் 7846 குடும்பங்களுக்கு வீட்டு வசதியின்மை-

indian schemeமட்டக்களப்பு மாவட்டத்தில் 7,846 குடும்பங்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட செயலாளர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸின் முயற்சியில் இவ்வாண்டு யுன் ஹபிடாட் நிறுவனத்தின் மூலம் 800 வீடுகளும் மீள்குடியேற்ற அமைச்சு ஊடாக 1,000 வீடுகளும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளின்றி உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளும் குடும்பங்களின் எண்ணிக்கையும் கோறளைப்பற்று வடக்கு – 234, கோறளைப்பற்று மத்திய – 296, கோறளைப்பற்று மேற்கு – 39, கோறளைப்பற்று – 309, கோறளைப்பற்று தெற்கு – 840, ஏறாவூர்ப்பற்று – 964, ஏறாவூர் நகர் – 120, மண்முனை மேற்கு – 1,040, மண்முணை வடக்கு – 475, காத்தான்குடி – 59, மண்முனைப்பற்று – 101, மண்முனை தென்மேற்கு – 930, போரதீவுப்பற்று – 2,329, மண்முனை தென்எருவில்பற்று – 110 என்றாவாறு வீடற்ற குடும்பங்களின் எண்ணிக்கை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பதவிகளுக்கு விண்ணப்பம் கோருவதற்கு தீர்மானம்-

policeபொலிஸ் சேவைகளில் நிலவுகின்ற பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் சேவையில் 3276 பதவி வெற்றிடங்கள் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். அதன்படி பொலிஸ் பரிசோதகர் பதவிகளில் 521 வெற்றிடங்களும், பெண் பொலிஸ் பரிசோதகர் பதவிகளில் 52 வெற்றிடங்களும், பொலிஸ் சார்ஜென்ட் பதவிகளில் 1861 வெற்றிடங்களும், பெண் பொலிஸ் சார்ஜென்ட் பதவிகளில் 567 வெற்றிடங்களும், பொலிஸ் சார்ஜென்ட் சாரதி பதவிகளில் 275 வெற்றிடங்களும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற அதிகாரிகளின் அளவுப்படி அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2015 டிசம்பர் 26ம் திகதி சேவை காலத்தை நிறைவு செய்த அதிகாரிகளிடமும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். பொலிஸ் சேவையில் அனைத்து பதவிகளிலும் நிரந்தர பதவி உயர்வு வழங்கும் நடைமுறை தயாரிக்கப்பட்டு அது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்காக பொலிஸ் மா அதிபரினால், சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சிடம் வழங்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் தேசிய கீதம் பாடியதை எதிர்த்து வழக்குத் தாக்கல்-

srilankaசுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அவ்வாறு பாடப்பட்டமையால் அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

களனி கல்பொருள்ளயை சேர்ந்த சன்ஜீய சுதன் பெரேரா, பேலியகொடையைச் சேர்ந்த பிரதீப் ஆசிரி சொய்சா மற்றும் களனிப் பகுதியைச் சேர்ந்த தொன் பிரேமரத்ன ஆகியோரே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்-

ertrtவெளிப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களின் வருகையின் காரணத்தினால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, புல்மோட்டை மீனவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வெளி மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி சுமார் 400 மீனவர்கள் தங்களின் படகுகளை வீதியோரத்தில் நிறுத்தி இன்றுகாலை தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

புல்மோட்டை கிராமிய ஐக்கிய மீனவர் சமாசம், கரைவலை மீனவர் சங்கம், 2ஆம் வட்டார மீனவர் கூட்டுறவு சங்கம் மற்றும் பொன்மலைக்குடா மீனவர் சங்கம் என்பன இணைந்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடக்கூடியது.