அரசியல் கைதிகள் குறித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு தவறானது-சித்தார்த்தன் எம்.பி-

D.Sithadthan M.P,.இலங்கையில் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு அளித்த வரலாறு உள்ள நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அரசியல் கைதிகள் விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகவேண்டுமெனக் கூறியதனை அரசாங்கம் முன்னிறுத்திப் பேசுவது தவறாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மகஸீன் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயத்தின்போது அரசியல் கைதிகள் சட்டரீதியாகக் கையாளப்பட வேண்டுமெனக் கூறியமை தொடர்பாகப் பேசப்பட்டு வருகின்றது. இந்தக் கூற்றை முன்னிறுத்தி அரசாங்கம் பேசுவது மிகப்பெரிய தவறாகும்.

மனித உரிமை ஆணையாளர் சர்வதேச சட்டம் தொடர்பில் பேசுகின்றார். இலங்கையில் 1981 மற்றும் 1989 காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இந்திய-இலங்கை உடன்படிக்கை மூலம் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான வரலாறு உள்ள நிலையில், தற்போது மட்டும் மனித உரிமை ஆணையாளரின் கூற்றை முன்னிறுத்துவது மிகப்பெரிய தவறு என்றார். 

(ரொஷான் நாகலிங்கம்) நன்றி – தினக்குரல்-28.02.2016)