பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மன்னாரில் பேரணி-

mannarபெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இன்று காலை மன்னாரில் கண்டன பேரணி இடம்பெற்றுள்ளது. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி குருசாந்தன் மஹாலட்சுமி தலைமையில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது. பின்னர் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதியில் ஒன்று கூடிய பெண்கள், பிரமுகர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தரமாறும் வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்தும் குறித்த கண்டன பேரணி இடம்பெற்றது. இதன்போது பெண்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து கண்டன பேரணி இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் அதிகாரியிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. பின் ஊர்வலமாக சென்ற பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர். குறித்த கண்டன பேரணியில் பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை, மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் உட்பட பலர் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் படுகொலைகளை கண்டித்து பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.