யோசித்த ராஜபக்ச கடற்படையிலிருந்து இடைநிறுத்தம்-

yosithaஇலங்கை கடற்படையில் இருந்து யோசித்த ராஜபக்ஷ தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, பெப்ரவரி 28ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அளவி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான இவர், அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, கடற்படைத் தலைமையகத்தின் அனுமதியின்றி யோசித்தவால் கடற்படை முகாமுக்குள் பிரவேசிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமஷ்டி முறை தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும்-தமிழ் மக்கள் பேரவை-

peravaiஇலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்காகத் தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பேரவையின் வல்லுநர் குழுவின் கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றபோதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அதற்கான திட்ட வரைவொன்றை தமிழ் மக்கள் பேரவை தயாரித்து, அதனைப் பொதுமக்கள் மத்தியில் வைத்திருக்கின்றது என இக் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கிடையில் குறைபாடுகள் நிறைந்ததொரு 13ஆவது அரசியல் திருத்தத்தையே இந்தியா அளித்தது என சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், குறைகளற்ற வகையில் சமஸ்டி முறையிலானதோர் அரசியல் தீர்வை இந்தியா பெற்றுத்தர வேண்டும் என கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பொது செயலாளரின் விஜயம்-

ICRCசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது செயலாளர் எல்ஹாஜ் எஸ் சீ, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வடக்கில் யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புகளை கண்காணிப்பது அவரின் இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது செயலாளர் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். இதற்கு இடையில் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

etrtrtஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, தடை செய்யப்பட்ட இழுவைப் படகுகள் மூலம் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. வடமாகாண மீனவ கூட்டமைப்பு, வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் ஊர்வலம், யாழ். இந்திய துணைத்தூதரகம் வரை சென்று அங்கு ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலேட் ஜெனரல் ஏ.நடராஜனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. ‘வடக்கு கடற்பரப்பு எல்லை மீறலை உடனே தடுத்து நிறுத்து, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல்வளத்தை அழித்து மீன்பிடிக்கும் இந்திய இழுவைப்படகுகளை நிறுத்து’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு, கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்டைதீவு கிணற்றை சோதனை செய்யுமாறு கோரிக்கை-

mandaitivuமண்டைதீவில் மூடப்பட்டுள்ள மூன்று கிணறுகளை தோண்டினால், தீவகத்தில் காணாமல் போன பலரின் மனித உடல்கள் வெளிவரும் என அதே பிரதேசத்தைச் சேர்ந்த வே.பேரின்பநாயகம் என்பவர் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளார். தீவகப் பகுதியில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் காணாமல்போனவர்கள், இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு மண்டைதீவில் உள்ள 3 கிணறுகளில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்த 3 கிணறுகளையும் சோதனை செய்யுங்கள். ஒருவேளை காணாமல்போனவர்கள் பலர் கொல்லப்பட்டு அதற்குள் போடப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். அத்துடன் மூன்று கிணற்றில் ஒரு கிணற்றை தோண்டிய போதும் மற்றைய கிணறுகள் எவையும் தோண்டப்படவில்லை. இதனால் அவற்றை தோண்டினால் பல உன்மைகள் தெரியவரும் என அவர் தனது சாட்சியத்தின்போது வலியுறுத்தியுள்ளார்.