ஊடகவியலாளர் மாத்தியூ லீயிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்-

fdfdfdffஐ.நா. அமைப்பின் இன்னர்சிட்டி பிரேஸ் என்ற இணையத்தின் சர்வதேச ஊடகவியாளர் மாத்தியூ லீ ஐ.நா அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமையை கண்டித்து இன்று யாழ் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியுள்ளனர். இதன்போது ஐ.நா.சபையின் பொதுச்செயலாளருக்கு பான்கீ மூனிடம் கையளிக்கும் வகையிலான மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட போதும் ஐ.நா அலுவலக அதிகாரிகாரிகள் அந்த மகஜரை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். ஐ.நா யாழ் அலுவலகம் தற்போது இயங்குவதில்லை என்றும் அந்த மகஜரை கொழும்பு அலுவலகத்தில் கையளிக்குமாறும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இயங்காத நிலையில் அலுவலகம் ஒன்று இங்கு தேவையில்லை என கோஷமிட்டுள்ளனர். மகஜரை கையளிக்க போராடியபோதும் அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ள முன்வராத நிலையில் மகஜரை தொலைநகல் மூலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்போவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஐ.நா.விலுள்ள மாத்தியூ லீயின் அலுவலகம் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் முற்றுகையிடப்பட்டு அவரது ஆவணங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டதுடன், மாத்தியூவின் அடையாள அட்டையைப் பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.