வடமாகாண ஆளுனருக்கும் ஜப்பான் தூதுவருக்குமிடையே சந்திப்பு-

alunar japanஇலங்கைக்கான ஜப்பான் தூதுவர் எச்.ஈ. கீனிச்சி சுகனுமா மற்றும் மூவர் அடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இவர்கள் யாழில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்திற்கு விஜயம் செய்து வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்துள்ளனர். வடக்கில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்வி, சுகாதாரம், கண்ணிவெடி அகற்றல் பணிகள், மற்றும் பாடசாலைகளுக்கான புனர்நிர்மாணப் பணிகள், கடல்வளங்களின் மேம்பாடு, நன்னீர் மீன் பிடிகளை மேம்படுத்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையிலான ஒற்றுமை தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் எனவும், இதனால் பல செயற்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்லுவதற்கு உதவியாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வடக்கில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்படாது காணப்படும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் எச்.ஈ. கீனிச்சி சுகனுமா இணக்கம் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.

யாழில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்-

oioiசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறுக் கோரி, அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்து, கடந்த திங்கட்கிழமை (29) வவுனியா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட, முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகனின் விடுதலைக்காக செயற்பட்ட அமைப்பு, இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, ‘உயிரை அடகு வைத்து உண்ணா நோன்பிருக்கும் உறவுகளின் உயிருக்கு விலைபேசாதே’, ‘நாட்டில் நல்லாட்சி, நாம் வீதியில் கண்ணீரும், கம்பலையுமாய், நீதி தேவதையே கண் திற’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், முருகையா கோமகன் கலந்துகொண்டு, அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் கலந்துரையாடியிருந்தமை இங்கு குறிப்பிடக்கூடியது.

எந்தவொரு தேர்தலும் 2016ஆம் ஆண்டில் இல்லை-

election.....இவ்வருடத்தில் எந்தவொரு தேர்தலும் நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடொன்று, கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர், ‘எல்லை நிர்ணய சபையின் பணிகள் பூர்த்தியாகாமல் உள்ளமையினால், உள்ளூராட்சிமன்றம் தேர்தலை நடத்த முடியாதுள்ளது’ என்றார். உள்ளுராட்சி மன்றங்கள் பலவற்றின் ஆயுட்காலம், இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு, கூட்டு எதிரணியினர் வலியுறுத்தி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

ஆஸியிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் கட்டுநாயக்கவில் வைத்து கைது-

airportசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதோடு, அந்த நாட்டு அதிகாரிகளால் தடுக்கப்பட்டு பின்னர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவர் அம்பகதவில பகுதியைச் சேர்ந்த 26வயதான ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பூரில் அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு-

ioioதிருகோணமலை சம்பூரில் அனல்மின் நிலையமொன்றை அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி மக்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டைபறிச்சான் பாலையூர் பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கூனித்தீவு, கட்டைப்பறிச்சான், சேனையூர், சூடக்குடா, கடற்கரைசேனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சம்பூர் அனல் மின் நிலையத்தினால் தமது அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஜோன் அமரதுங்க காணி அமைச்சராக சத்தியப்பிரமாணம்-

t5yt5அமைச்சர் ஜோன் அமரதுங்க, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது இவர் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சராக இருக்கும் நிலையில், அதற்கும் மேலதிக இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளார்.

மறைந்த, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்துக்கே இவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்தி வலைத்தளங்களை பதிவு செய்யுமாறு அறிவிப்பு-

websitesஇம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து செய்தி வலைத்தளங்களையும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்ளுமாறு, குறித்த அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இவ்வாறு அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்வதன் மூலம், அனைத்து செய்தி வலைத்தளங்களும் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் நெறிமுறைக்கமைய அங்கிகாரத்தை பெற்று செயற்பட முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.