இணையத்தளங்கள் அனைத்தும் 31ம் திகதிக்கு முன் பதிவு-
இதுவரை பதிவு செய்யப்படாத செய்தி இணையத்தளங்கள் அனைத்தையும் மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளுமாறு, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த தினத்திற்கு முன் பதிவு செய்யாத எந்தவொரு இணையத்தளத்தையும் ஊடக அமைச்சு உத்தியோகபூர்வமாக ஏற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ள 011 – 251 3460 அல்லது 011 251 3943 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும். அவ்வாறு இல்லை எனில், றறற.அநனயை.பழஎ.டம என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன்மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாமென கூறப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் இன்றும் விசாரணை-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.
ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இன்றும் ஆணைக்குழுவினால் வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பிலேயே அவர் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னரும் சில தடவைகள் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தற்போதைய பாதுகாப்புச் செயலாளரான கருணாசேன ஹெட்டியாராச்சியும் இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமில்காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை-
புலிகள் இயக்கத்தின் நிதிப் பிரிவின் தலைவர் எனக் கூறப்படும் அன்டனி எமில்காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு முன்னதாக, பிடியாணை மற்றும் ரெட் நோட்டீஸ் என்பன வெளியிடப்பட்டுள்ளன. எனினும், நீதிமன்றத்தில் ஆஜராவதாக அவரது சட்டத்தரணி மூலம் எமில்காந்தன் அறிவித்ததை அடுத்து, குறித்த பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
எது எவ்வாறிருப்பினும், சந்தேகநபர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும், இது பிரச்சினைகளை தோற்றுவிப்பதாகவும் நீதிமன்றத்தில் இன்று அரச தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதன்படி, சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அய்ரங்கனி பெரேரா உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபர் எச்சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் சரணடைய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். வழக்கை மே 18ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி தீர்மானித்துள்ளார்.
யாழ். மாநகர சபை சுத்திகரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்-
யாழ். மாநகர சபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்க கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். மாநகர சபையின் முன்பாக இன்று காலைமுதல் நண்பகல் வரை இந்த ஆர்ப்பாட்டத்தினை இவர்கள் முன்னெடுத்திருந்தனர். யாழ்.மாநகர சபையின் கீழ் 180 பேர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சுகாதார ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றார்கள். நாளாந்த சம்பளத்தின் அடிப்படையில் கடமையாற்றும் தம்மை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரியுள்ளனர்.
கடந்த காலங்களில், நிரந்தர நியமனம் வழங்க கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் 3 மாத காலத்திற்குள் நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் கடந்த காலங்களில் இருந்த யாழ்.மாநகர ஆணையாளர்கள் 3 பேரிடமும் தமக்கான நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். தமது குடும்ப சூழ்நிலைகள் மற்றும் வாழ்வாதார நிலமைகளை கருத்திற்கொண்டு தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், யாழ். மாநகர ஆணையாளரை சந்தித்து நிரந்தர நியமனம் குறித்து கலந்துரையாடியபோது, வயதெல்லை பார்ப்பதாகவும், அதில் 16 பேருக்கு மட்டும் நிரந்தர நியமனம் தருவதாகவும் தெரிவித்துள்ளார். 180 பேரில் 16 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள மறுத்த சுகாதார ஊழியர்கள், அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.