பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்த வேண்டும்-நிஷா பிஸ்வால்-

nisha thesai biswalஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வகையான அழுத்தங்களையும் இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பிலான செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தமை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இது தொடர்பில் நிஷா தேசாய் பிஸ்வால் கூறுகையில், ஐ.நா மனித வுரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் முதற்தடவையாக இணை அனுசரணை வழங்கியிருந்தது. இதற்காக நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றினோம். ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வகையான அழுத்தங்களையும் இலங்கை அரசாங்கத்துக்கு கொடுப்போம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இத்தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கையில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நடைமுறைப்படுத்துவார்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை பாதிக்கப்பட்ட மற்றும் ஏனைய தரப்பினர்களையும் உள்வாங்கி வெளிப்படையாகவும், ஆரோக்கியமாகவும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையிலும், சர்வதேச நியமங்களை உறுதிப்படுத்தும் வகையிலும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறல் பொறிமுறையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.