பெற்றோரின் முயற்சியே குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது-த.சித்தார்த்தன் எம்.பி-(படங்கள் இணைப்பு)
யாழ். சென்ற் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்கான விளையாட்டுப் போட்டி இன்று (04.03.2016) கல்லூரியினுடைய அதிபர் அருட்தந்தை ஜெரோ செல்வநாயகம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் வலய ஆரம்பப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் மைதிலி தேவராஜா அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பப் பிரிவின் பொறுப்பாசிரியை அருட்சகோதரி மேரி நிரஞ்சலா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பும் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
நான் பல பாடசாலைகளில் நிகழ்வுகளைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் இன்றைக்கு இங்குதான் மிகப் பெருந்தொகையாக பெற்றோர்கள் கலந்துகொண்டிருப்பதை பார்க்கின்றேன். இது உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தரக்கூடிய விடயமாக இருக்கின்றது. அதாவது பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளில் காட்டுகின்ற அக்கறை இவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. பாடசாலைகளது அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயற்படுகிற போதிலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்களின் பெற்றோர்களுடைய முயற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதை நான் இங்கு பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இதுபோல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தினால் குழந்தைகள் சிறந்த பிரஜைகளாக உருவாகுவார்கள் என்று தெரிவித்தார்.