சூளைமேடு கொலை வழக்கு, வீடியோ மூலம் டக்ளஸ் எம்.பி சாட்சியம்-

douglas MPதமிழ்நாடு சூளைமேட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலான வழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்று சாட்சியமளித்தார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து வீடியோ கொன்பரன்ஸ் மூலம் அவர் இன்று முற்பகல் சாட்சியமளித்தார். 1986ஆம் ஆண்டு சென்னையிலுள்ள சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக 1990ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதிவரை நீதிமன்றத்தில் ஆஜரான டக்ளஸ் தேவானந்தா பின்னர் ஆஜராகவில்லை. இதற்கமைய, அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்றும் அறிவித்து சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மனு தாக்கல் செய்ததை அடுத்து, தலைமறைவு குற்றவாளி என்று அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மட்டும் உயர் நீதிமன்றம் இரத்து செய்தது.தொடர்ந்து பிடியாணையை இரத்து செய்யக் கோரி டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவை அமர்வு நீதிமன்றம் நிராகரிக்க அவர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இதனை பரிசீலித்த நீதிமன்றம் வீடியோ கொன்பரன்ஸ் ஊடாக டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்தது. இதற்கமைவாகவே டக்ளஸ் தேவானந்தா எம்.பி இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து வீடியோ கொன்பரன்ஸ் ஊடாக சாட்சியமளித்துள்ளார்.