முள்ளியவளை மக்களின் கோரிக்கைக்கு அமைய பொது கிணறு அமைப்பு-(படங்கள் இணைப்பு)
முள்ளியவளை மத்தி மக்களின் பொதுக் கிணற்றுக்கான கோரிக்கைக்கு அமைய ரிசி தொண்டுநாத சுவாமி(அமெரிக்கா) அவர்களால் பொதுக்கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை மத்தி கிராம உத்தியோகத்தர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட 30 வீட்டுத்திட்டத்தை சேர்ந்த மக்கள் குடிப்பதற்குக்கூட தண்ணீர் வசதியின்றி அவதிப்படுவதாகவும் தங்களின் பிரதேசத்தில் ஒரு கிணறுகூட இல்லை என்றும் தமக்கான குடிநீரை பணம் செலுத்தி கொள்வனவு செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளதாக கூறியிருந்தனர். இதனைக் கருத்தில் எடுத்த வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் ரிசி தொண்டுநாத சுவாமியின்(அமெரிக்கா) கவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் 27.12.2015 அன்று கொண்டு சென்றதையடுத்து சுவாமி உடனடியாக அம்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை கவனத்தில் எடுத்தார். தொடர்ந்து அப்பிரதேசத்தில் பல லட்சம் ரூபா செலவில் புதிதாக கிணறு அமைக்கும் பணி தொடக்கிவைக்கபட்டு தற்போது முடிவுறும் நிலைக்கு வந்துள்ளதுடன் மக்களுக்கான தண்ணீர் பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளது. வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் வேண்டுகொளை ஏற்று ரிசி தொண்டுநாத சுவாமிகளால் மக்களின் தண்ணீர் பிரச்சனை முடிவுக்கு கொண்டு வந்ததையொட்டி சங்கத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகளை சுவாமிக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)