சுவிஸில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு-

swissசுவிச்சர்லாந்தில் உள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கான சரியான தருணம் இதுவல்ல என்று சுவிட்சர்லாந்தில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சுவிச்சர்லாந்திற்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்தார். மீண்டும் நாட்டிற்கு திரும்பி நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைக்குமாறும், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பதாகவும் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருக்கும் இலங்கையர்களிடம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்னில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே சுவிட்சர்லாந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளன. கடந்த 2015ம் ஆண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு மீண்டும் நாடு திரும்பியவர்கள் கைது செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. சுவிச்சர்லாந்தில் தற்போது சுமார் 50,000 இலங்கையர்கள் வசித்து வருவதாகவும் இவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.