மன்னார் மனிதப் புதைகுழி விசாரணைகளில் அசமந்தப்போக்கு-

puthaikuliமன்னார் மனிதப் புதைகுழி விசாரணைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதால், அரச சட்டத்தரணி ஒருவரை நியமிக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 2013 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மன்னார் மாந்தையிலுள்ள திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி வழக்கு மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ் ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 87 மனித மண்டையோடுகள் மற்றும் எச்சங்களின் கால எல்லையை வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பரிசோதிக்க முயற்சிப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். இந்நிலையில், பெய்ஷரூட், ஆர்ஜன்டீனா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் நிறுவனங்களின் தூதரகங்கள் இலங்கையில் இல்லாதபடியால், அந்த நாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறும் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த மனுதாரர் தரப்பு சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன், குறிப்பிட்ட மூன்று வெளிநாட்டு நிறுவனங்களினதும் தகவல்களை தங்களால் வழங்கமுடியும் என நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதவான், புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித மண்டையோடுகள் மற்றும் எச்சங்களின் கால எல்லையைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளுக்காக ஒவ்வொரு வழக்குத் தவணையின்போதும் மூன்று மாத இடைவெளியில் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதால், அதுகுறித்து சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அறிவுரைக்கமைய வழக்கில் ஆஜராவதற்காக அரச தரப்பு சட்டத்தரணியை நியமிக்குமாறும் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ் ராஜா கட்டளை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து மன்னார் மனிதப் புதைகுழி விவகார வழக்கு விசாரணை ஏப்ரல் 4ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.