அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்துள்ளது-

welikada jailஉணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலைமை மோசமடைந்து வருவதாக, அவர்களை பார்வையிடச் சென்றிருந்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த பட்சம் தம்மை பிணையின் அடிப்படையிலேனும் விடுவிக்குமாறு கோரி, அரசியல் கைதிகள் கடந்த இரு வாரமாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தமாக 14பேர் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் பெண்ணாவார். அதேநேரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றவர்களில் 3பேர் புனர்வாழ்வு பெற்று சமுகமயப்படுத்தப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்களாவர். ஒருவர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டவர். மேலும் இருவர் வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக இலங்கைக்கு வந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்கள் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் கைதிகளில் பெரும்பாலானவர்கள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் சந்தித்த அரசியல் கைதிகள், தங்களுக்கு பலவந்தமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், சிலருக்கு சிறுநீருடன் ரத்தம் கசிவதாக தங்களிடம் கூறியதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் உண்ணாவிரதம்-

aarpattamதமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, நாளை காலை 7மணிக்கு யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் வளாகத்தில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக, மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு என்பன தெரிவித்துள்ளன.

இதில் வட மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் குடும்பங்கள் உள்ளிட்ட அனைவரையும் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் கொழும்பு வருகை-

sarvadesa nanaya nidiyamசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த மாத நடுப்பகுதியில் கொழும்புக்கு வரவிருப்பதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் கடன்கள் அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக இந்த குழு கொழும்பு வரவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த வருட இறுதியில் அரசாங்கத்தின் நிலுவைக் கடன் 8,475 பில்லியன் ரூபாவாக இருந்ததாக அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 74.9 சதவீதம் என்றும் அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் குறிப்பாக 2006ஆம் ஆண்டுக்கு பின்னரான காலங்களில் கடன்கள் அதிகரித்துள்ளது என்றும் அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். இந் நிலையில் புதிய அரசாங்கத்தின் அடுத்த நிதியாண்டுக்கான கடன் தேவைகளை கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியம் உதவி செய்ய முன்வந்திருப்பதாகவும் ஆனாலும் புதிய அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பாக அறிந்து நிலைமைகளை அவதானிக்க சர்வதேச நாணய நிதியத்தின் குழு கொழும்பு வருவதாகவும் நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸி செல்ல முற்பட்ட 17 பேரும் காலி பொலிசாரிடம் ஒப்படைப்பு-

australia refugeesகாலி கலங்கரை விளக்கப் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட நிலையில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

17 இலங்கையர்கள் இவ்வாறு கைதாகியுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் கடந்த முதலாம் திகதி நீர்கொழும்பு பகுதியில் இருந்து படகுகள் மூலம் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து புலனாய்வினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கை-

minesகடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதைக்கப்பட்ட மிதி வெடிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை பாசிக்குடா வீதிக்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதி வெடிகளை அகற்றும் பணிகள் நேற்று இடம்பெற்றது.

இந்தப் பணிகளில் 231வது இராணுவப் படைப் பிரிவின் மிதி வெடி அகற்றும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலையில் மீன்பிடிப் படகுகள் தீக்கிரை-

gfgfதிருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் படகுகளின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இருப்பினும் இந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்மபவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.