மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அச்சுவேலி பத்தனையில் யுத்த பாதிப்புகள், விவசாயம் குறித்து ஆராய்வு-(படங்கள் இணைப்பு)
வட மாகாண விவசாய அமைச்சர் கௌரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களும், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் யாழ். அச்சுவேலி பத்தனைப் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகள் மற்றும் வீதிகளையும், அப்பகுதி விவசாய நடவடிக்கைகளையும் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். அவர்களுடன் திரு. சி.சிவகுமார் (மாகாணப் பணிப்பாளர், வடமாகாண விவசாயத் திணைக்களம்), திரு. கி.சிறீபாலசுந்தரம் (மாகாண உதவிப் பணிப்பாளர் வட மாகாண விவசாயத் திணைக்களம்) ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
இதன்போது அப் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் கிணறுகளையும், அப்பகுதி வெங்காயச் செய்கையினையும் நேரில் பார்வையிட்டதோடு, சேதன உரங்களைத் தயாரிக்கின்ற முறைகள் மற்றும் அவைகளைப் பயன்படுத்துகின்ற விதங்கள் என்பன பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது விவசாயிகள் தங்கள் பகுதி வீதிகள் பாதிக்கப்பட்டு, கிணறுகள் பாழடைந்த நிலையில் இருப்பதை எடுத்துக் கூறினார்கள். இவ்விடயத்தில் கூடுதல் கவனமெடுத்து தங்களால் இயன்றளவுக்கு இப்பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக மாகாண விவசாய அமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் தெரிவித்தனர்.