மக்களின் கடும் எதிர்ப்பினால் காணி அளவீடு இடைநிறுத்தம்-
யாழ்ப்பாணம் வலி. வடக்கு சேந்தான்குளம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணியை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக காணியினை கடற்படையினர் மற்றும் நில அளவையாளர்களின் அளவீடு செய்யும் முயற்சியானது மக்களின் கடும் எதிர்ப்பின் காரணத்தினால் இன்றையதினமும் இடைநிறுத்தப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தின்போது குறித்த நிலத்தினை சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது மக்களின் கடும் எதிர்ப்பினால் காணி அளவீடு செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டு இருந்தன. தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் குறித்த காணியினை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட இருந்தது. ஆனால் இம்முறையும் மக்களின் கடும் எதிர்ப்பால் நில அளவை செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது. அப்பகுதி காணி உரிமையாளர்களுடன், வலி, வடக்கு மீள்குடியேற்றக் குழுவினுடைய தலைவர் சஜீவன், மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோர் திரண்டு சென்று மேற்படி நில அளவீட்டுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
15ஆவது நாளாக அரசியல் கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதம்-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 15 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தம் மீதான நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளில் மூவர் சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சைகளின் பின்னர் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியதுடன் நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் உடல்நிலை குறித்து தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளாhர்.
பாகிஸ்தான் ஜனாதிபதி, தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்-
பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்மூன் ஹ_ஸைன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். தனது குறுகியகால இலங்கை விஜயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் சொம்கிட் ஜட்டுஸ்ரிபிடக் இன்றுமுற்பகல் 11 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள அவருடன் அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் 20 பேர் வருகை தந்துள்ளனர். இதன்போது, இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரபு நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-
அரபு நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஐவர் அடங்கிய குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது. இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் மொஹம்மட் ஜமிலா, சவுதிஅரேபிய தூதுவர் ஏ.கே.ஏ.அல்முல்லா, குவைத் தூதுவர் கலாப் எம்.எம்.புடையிர், ஓமன் மற்றும் எகிப்து நாட்டு தூதுவர்களான மலிக் அல்சிக்னி மற்றும் எச்.எம்.மொஹம்மட் அஸ்ரம் ஆகியோரே இவ்வாறு விஜயம் செய்திருந்தனர். நேற்று யாழ் சென்றிருந்த இக்குழுவினர் யாழிலுள்ள ஜும்மா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ் முஸ்லிம் பிரதிநிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்திலிருந்து கடந்த காலங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்றும் தற்போதுவரை மீள்குடியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் அக்குழுவினர் கேட்டறிந்ததுடன் வாழ்வாதார நிலமைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர். மேலும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள அரபு நாடுகளின் தூதரகத்தில் முறையிட முடியும் என்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களை வடக்கிலுள்ள முஸ்லிம்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்கடத்தலைத் தடுக்க 12 நாடுகள் இணைந்த செயற்பாடு-
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் 12 நாடுகள் இணைந்து செயற்படத் திட்டமிட்டுள்ளன. ஆசியாவின் ஊடாக இடம்பெற்று வரும் பாரியளவிலான சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாரிய குற்றச் செயல்களை தடுக்க இவ்வாறு 12 நாடுகள் இணைந்து செயற்பட உள்ளன. அவுஸ்திரேலியாவையும் இலங்கையையும் மையமாகக் கொண்டு இந்த நாடுகள் இயங்க உள்ளன. இந்தோனேசியா, மலேசியா, மாலைதீவு, தாய்லாந்து, பங்களாதேஷ், வியட்நாம், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இவ்வாறு இணைந்து செயற்படவுள்ளன. இந்த நாடுகளின் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கவும் முறியடிக்கவும் முயற்சிக்க உள்ளனர். மேலும் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பிலான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த நாடுகள் இணைந்து செயற்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கர்ப்பிணித் தாய்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது-
கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலை சந்திக்கு அருபாமையில் வைத்து கர்ப்பிணித் தாய் ஒருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேநகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம, மிதிகம, பிட்டதூவ வீதியில் சந்தேகநபரைக் கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவினர் குறிப்பிட்டனர். வெலிகமை பகுதியைச் சேர்ந்த 26வயதான ஒருவரே சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைக்குண்டு மற்றும் 5 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.