கடைகள் உடைப்பு இன ஒற்றுமையைக் குழப்பும் சதி-வியாழேந்திரன் எம்.பி-

vijalendran mpதமிழ், முஸ்லிம் எல்லைப் பகுதியில் ஒரே நேரத்தில் 6 கடைகள் உடைக்கப்பட்டமை இன ஒற்றுமையைக் குழப்பும் திட்டமிட்ட சதி, நாசகார வேலை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில் நேற்றுமுன்தினம் அதிகாலை 6 கடைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுடன் கலந்துரையாடும்போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, ஏறாவூர் நாலாம் குறிச்சிப் பிரதேசம் பூர்வீகமாக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் வாழ்கின்ற ஒரு எல்லைப் பகுதி. அப்படிப்பட்ட ஒரு பிரதேசத்தில் திட்டமிட்டு தமிழ் மக்களின் 6 கடைகள் ஒரே நேரத்தில் உடைத்து சேதமாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, நல்லாட்சி அரசு கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்தவிதமான சதிநாச வேலைகளில் ஒரு பிரிவினர் செயற்படுவதை நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.

இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது திட்டமிட்ட சதியின் அடிப்படையில் இன ரீதியான நல்லுறவைக் குழப்புகின்ற ஒரு நிலைமையைத் தோற்றுவிக்க முயற்சிப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. தற்போதைய நல்லாட்சி அரசின் காலத்திலும் கூட தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்ற வன்புணர்வுக் குற்றங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கின்றன. இந்தச் சம்பவத்தையும் சாதாரணமான ஒரு சம்பவமாகக் கருதி விட்டுவிடாமல் சம்பந்தப்பட்ட, பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். குற்றவாளிகள் கண்ட பிடிக்கப்படாமல் தப்ப விடப்படுவார்களாயின் இனரீதியான வன்முறைகள் இடம்பெற வாய்ப்பாகி விடும் என்று தெரிவித்துள்ளார். நகைக்கடை ஒன்று, சில்லறைக் கடைகள் 2, தொலைத் தொடர்பு அட்டைகள் விற்கும் கடை ஒன்று, ஒரு சலூன், இலத்திரனியல் உபகரணங்கள் விற்கும் கடை ஒன்று என்பனவே உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் அங்கும் இங்கும் வீசி சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் பெறுமதியான உடமைகள் எவையும் திருடிச் செல்லப்படவில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது திட்ட சதி நாச நோக்கத்தை அடிப்படையாக வைத்து ஏக காலத்தில் ஒரே இடத்தில் தொடராக அமைந்த கடைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன என வர்த்தகர்களும் தெரிவிக்கின்றார்கள். பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.