மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மற்றும் வடமேல் மாகாணத்தில் பேரணிகள்-(படங்கள் இணைப்பு)

dsfddfசர்வதேச பெண்கள் தினமான இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதிப் பேரணி ஒன்று இன்றுகாலை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் குருஸாந்தன் மஹாலட்சுமி தலைமையில் மன்னார் பிரஜைகள் குழுவிற்கு முன்பாக இப்பேரணி ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் தமது வாயை கறுப்பு துணியினால் கட்டி அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். மன்னார் பிரஜைகள் குழுவிற்கு முன்பாக பேரணி ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை அடைந்து, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்களை கையளித்தனர். இதேவேளை பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளை நிறுத்தக்கோரி வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினமான இன்று கிளிநொச்சியில் பெண்கள் கறுப்புப் பட்டிகளை கட்டியவாறு பேரணியில் ஈடுபட்டிருந்தனர். கிளிநொச்சி மாவட்ட மகளிர் அமைப்பு இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. இப் பேரணி கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இன்று முற்பகல் ஆரம்பமாகி ஏ-9 வீதியூடாக மாவட்ட செயலகம் வரைசென்றது. பேரணியைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை ”மகளிர் தினத்தினை இருண்ட தினமாகக் கருதுகின்றோம்” என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது அத்துடன் யாழ் நகரில் வீடுகளிலும், கடைகளிலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. பெண்களின் உரிமைகளை பாதுகாப்போம் நாட்டில் வலுவான பெண் சமுதாயத்தினை உருவாக்குவோம் என்னும் கருப்பொருளில் இன்று யாழ் பல்கலைகழக பரமேஸ்வர சந்தியின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும் சர்வதேச மகளிர் தினமான இன்று மட்டக்களப்பில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனப் பேரணி என்பவற்றில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்பு ஆடை அணந்திருந்ததுடன், கறுப்புக்கொடிகளையும் ஏந்தியிருந்தனர். மட்டக்களப்பு சூர்யா பெண்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது. மகளிருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் உட்பட பெண்களுக்கெதிரான துஸ்பிரயோகங்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் இவர்கள் ஏந்தியிருந்தனர். மேலும், புத்தளம் மாவட்டத்தில் மகளிர் அமைப்புக்கள் இருண்ட பங்குனி எனும் தொனிப் பொருளில் மகளிர் தின நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. பாலாவி நகரில் மகளிர் ஒன்று கூடி கறுப்பு ஆடைகளை அணிந்தவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக இம்முறை மகளிர் தினத்தை கறுப்புப் பங்குனியாக மகளிர் அமைப்புக்கள் அடையாளப்படுத்தி இருந்தன.

asdssds sdff gfdf sadsds sadsd asdsd mannar