குற்றச் செயல்கள் அதிகரித்தபோதிலும் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இல்லை-

ruwan gunasekaraநாட்டில் குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள போதிலும், பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இல்லை என பொலிஸார் உறுதியளித்துள்ளனர். தலைநகரம் மற்றும் தென் பகுதிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, இந்த குற்றச்செயல்கள் தனிப்பட்ட பகைமை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். கடந்த சில வாரங்களில் இலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த மார்ச் 5ம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் காயமடைந்தார். எதுஎவ்வாறு இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் அண்மைக் காலங்களில் பாதாளக் குழுக்களிடையேயான மோதல்கள் காரணமாக மூவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தலைமையில் 32ஆவது முதலமைச்சர்கள் மாநாடு-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 32ஆவது முதலமைச்சர்கள் மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி தென் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக தென் மாகாண சபையின் பிரதம செயலாளர் ஆர்.சி.டி சொய்ஷா தெரிவித்துள்ளார். 9 மாகாண முதலமைச்சர்களும் சந்திக்கும் இந்த மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் மாகாண நிர்வாகத்தை கொண்டு நடாத்துவதில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டைகள் குறித்து முழுமையான அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் மாகாண நிர்வாகத்தில் குறிப்பாக அபிவிருத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்ற ஆளுநரின் அநாவசியத் தலையீடுகள் பற்றி முழுமையான அறிக்கையொன்றைத் தயார் செய்திருப்பதாகவும், இது குறித்து ஏனைய மாகாண முதலமைச்சர்களுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கை மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பிரிவுகளில் ஆளுநரின் அநாவசியத் தலையீடு இடம்பெற்ற சந்தர்ப்பங்களையும் தாங்கள் ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாங்குளம் அம்பகாமம் பாடசாலை மாணவர்களுக்கு வட்டு. இந்து வாலிபர் சங்கம் அன்பளிப்பு-

vaddu hinduமாங்குளத்தைச் சேர்ந்த அம்பகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் உள்ளது. இப்பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக காணபடுகின்றனர்

அந்த வகையில் பாடசாலை கழுத்துப்பட்டி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எல்லா மாணவர்களும் அணிந்து வருவதில்லை எனவும் அவற்றை பெற்றுக் கொள்வதற்க்கான பணவசதி தங்கள் மாணவர்களுக்கு இல்லை என்பதால் அவற்றை தமக்கு பெற்றுத் தருமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் பாடசாலை அதிபரினால் முன்வைக்கபட்ட விண்ணப்பத்தை தொடர்ந்து

சங்கத்தினால் 100 பட்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. இவ் கழுத்துப் பட்டிகளுக்கான நிதியினை அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை நிராகரித்த அரசியல் கைதிகள்-

welikada jailதமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானங்களை அறிவிப்பதற்காக மகசீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்தபோதே, அவர்கள் இவ்வாறு கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக தாம் இவ்வாறு உண்ணாவிரதத்தை முன்னெடுத்திருந்தபோது, அவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதி அளித்தபோதும், அவர் அதனை நிறைவேற்றவில்லை என தமிழ் அரசியல் கைதிகள் இதன்போது தெரிவித்தனர் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இதனாலேயே எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்ததாக கூறினார்.

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு-

 pillaiyanகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நால்வரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் பிள்ளையான் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும் மட்டக்களப்பு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேகநபர்கள் சார்பாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினராலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை ஆராய்ந்த பின்னர், சந்தேகநபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, கஜன் மாமா என அழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயகம் மற்றும் எம்.எல். கலீல் ஆகியோரின் விளக்கமறியல் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்துப் பிரதிப் பிரதமர் -அமைச்சர் மங்கள சந்திப்பு-

dsffdஇலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதிப் பிரதமர் சோம்கிட் ஜதுஸ்ரீபிடக்கிற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இருநாடுகளினதும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதோடு, தொழிநுட்ப ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறையில் இருநாட்டு கூட்டு நடவடிக்கை குறித்து இரு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அத்துடன், நாளைய தினம் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் இணைத் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ள பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடலில் தாய்லாந்து பிரதிப் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் தாய்லாந்து பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறினே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இதேவேளை, தாய்லாந்து பிரஜைகள் மத்தியில் பௌத்த மதம் சார் சுற்றுப்பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், பௌத்த பாரம்பரிய தலங்கள் அமைந்துள்ள களனி ரஜமஹா விஹாரை, கண்டி மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு-

namalநிதி மோசடி தொடர்பான சட்ட வரையறைகளை மீறிய குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டுப் பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவால் ஊழல் எதிர்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவால் சட்டவிரோதமாக பெறப்பட்ட 15 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதாக குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாமல் ராஜபக்ஷ தவிர்த்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஏழு பேரதும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், சம்பந்தப்பட்ட ஏழுபேரதும் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் குறித்த நிறுவனத்துக்கு சொந்தமான 4 வங்கிக் கணக்குகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், குறித்த வழக்கை மார்ச் 31ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக குறிப்பிட்ட அவர், அன்றையதினம் வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.