துயர் பகிர்கின்றோம்

mangayatkarasi amirthalingamஇலங்கைத் தமிழர் அரசியலில் பெரும்பங்காற்றியவரும் தளபதி என தந்தை செல்வாவாலும் தமிழ் மக்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்புக்குரிய அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் இன்று லண்டனில் தனது 82வது வயதில் காலமானார். வட்டுக்கோட்டை தொகுதியில் மூளாய் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாக கொண்ட மங்கையர்க்கரசி அவர்கள், 1954ல் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.

இலங்கைத் தமிழர் அரசியலில் அவரது கணவரின் செயல்பாடுகளுக்கு பெரிதும் துணைநின்ற மங்கையர்க்கரசி, கவிஞர் காசியின் பாடல்களை மேடைகளில் உணர்வுபூர்வமாக பாடி ஆற்றிய எழுச்சியுரைகளும் அன்றைய இளைஞர்கள், யுவதிகள்; தமிழ் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட ஒரு காரணமாகவிருந்தது என்பது மிகையல்ல. 1961ம் ஆண்டு நடந்த அரசுக்கெதிரான சத்யாகிரக நடவடிக்கையில் கைதாகி 6 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்ததுட்பட பல உரிமைப்போராட்டங்களில் மக்களை- குறிப்பாக பெண்களை- ஒன்றிணைத்து தலைமை தாங்கியிருந்தார். ஈழத்தில், தமிழ் தேசிய எழுச்சியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான ஜனநாயக போராட்டங்களிலும் துணிச்சலுடன் பங்கேற்ற முதல் தமிழ் பெண் போராளியாக அவரை வரலாறு பதிவு செய்கிறது.

ஈழத் தமிழ்இனத்தின் விடுதலைக்காக போராடிய ஒரு முன்னோடி புரட்சிப் பெண்ணாக, மக்களின் மனங்கவர்ந்த – மக்களில் கரிசனைகொண்ட ஒரு அரசியல் பேச்சாளராக, வந்தாரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து வழியனுப்பும் குடும்பத் தலைவியாக, தனது புதல்வர்களுக்கு ஒர் அன்புமிக்க அக்கறையுள்ள தாயாக அவர் பல் பரிமாணங்களை கொண்டவர். தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் சுடப்பட்டு படுகொலை செய்யப்படும்வரை, கணவருடன் சேர்ந்து ஓயாது ஒழியாது தமிழ் மக்களின் அரசியலுடன் தன்னைப் பிணைத்திருந்தார். அவர் வரித்துக்கொண்ட வாழ்க்கையும் அரசியலும் பல்வேறு உளைச்சல்களுக்கு அவரை ஆளாக்கியிருந்தபோதும் அவர் அதுகுறித்து விரக்தியையோ வெறுப்பையோ வெளிக்காட்டியிருக்கவில்லை. மாறாக போர் தின்ற மக்களின் வாழ்வு குறித்து கவலையும் கரிசனையும் கொண்டிருந்தார். அவர்களுக்கு உதவுவதில் தன்னாலான முயற்சிகளை இறுதி நாட்களிலும்கூட செய்துகொண்டிருந்தார் என்பதை நாமறிவோம். அண்மையில் உரையாடியபோதும் அவர் அதுபற்றியே எம்முடன் பேசியிருந்தார். 

இறுதிவரை இனத்தை நேசித்த அன்னாரின் பிரிவு ஆழ்ந்த துயருக்குரியது. அவருக்கு எங்கள் இதயஅஞ்சலிகள். மங்கை அக்கா என அன்புடன் விழிக்கப்பட்ட மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் எமது வரலாற்றில் என்றும் வாழ்ந்திருப்பார். வரலாறு அவரின் வாழ்வை மீட்டுத் தரும்.

-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
(10-03-2016)