வடக்கு மக்களின் தங்கம் மீளக் கையளிக்கப்படும்-பிரதமர்-

ranilபுலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த வங்கிகளில் அடகுவைக்கப்பட்ட பொது மக்களின் தங்க நகைகள் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த வங்கிகளில் அடகுவைக்கப்பட்ட பொதுமக்களின் தங்க நகைகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன. அவற்றில் சில புலிகளுக்குச் சொந்தமானவை. இராணுவத்தினரால் 150 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டு கட்டம் கட்டமாக மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டது. இவற்றின் பெறுமதி 131 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்ட தங்கம் ஆகியவை தொடர்பில், முரண்பாடான கருத்துக்களே நிலவுகின்றன. இதுகுறித்து தரவுகளை ஆராய்ந்து விரைவில் சரியான தகவலை தெரிவிக்கிறேன். தங்க நகைகளுக்கு சொந்தக்காரர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அது தொடர்பான விபரங்களை அறிவதற்கு முன்னாள் இராணுவ தளபதி என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். இராணுவத்தினரிடம் தற்போது சுமார் 80 கிலோ தங்கம் உள்ளது. அவற்றிற்கான உரிமையாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம். எஞ்சியவை மத்திய வங்கியிடம் கையளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு கிராமசேவகர் பிரிவுகளில் பதிவு நடவடிக்கைகள்-

fdfdfdfமட்டக்களப்பில் இடம்பெறும் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அண்மைக்காலமாக கொள்ளை, கொலை, கடத்தல்கள் சம்பவங்கள் இடம்பெற்று வருவதுடன், எல்லைகள் மீள் நிர்ணயம் தொடர்பில் வன்செயல்கள் இடம்பெற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் சாதாரண தோற்றப்பாட்டுக்கு கீழ் ஒரு குழப்ப நிலைமையும் உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும், இவற்றால் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கிராமசேவை உத்தியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த பதிவுக்குரிய விண்ணப்பப்படிவங்கள் பொலிஸாருக்கு உரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

நோ பயர் ஸோன் படத்தை மலேஷியாவில் வெளியிட்ட லெனா ஹென்ரி விடுவிப்பு-

rettrtஇலங்கை யுத்த வலயம் தொடர்பான “நோ பயர் ஸோன்” என்னும் ஆவணப்படத்தை மலேசியாவில் காட்சிப்படுத்திய பெண் மனித உரிமை செயற்பாட்டாளர், லெனா ஹென்ரி குற்றமற்றவர் என, அந்தநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் உரிய முறையில் நிரூபிக்கப்படவில்லை எனவும் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதவான் மொஹட் ரிஹெப் மொஹட் அரீஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மலேசியாவின் திரைப்படத் தணிக்கை சட்டத்தின் கீழ் ஹென்ரிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதேவேளை, குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருந்தால், லெனா ஹென்ரிக்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை அல்லது 300,000 மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளுமே விதிக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜெனீவா விசாரணைகளின்போது சர்வதேச கண்காணிப்பு அவசியம்-அமைச்சர் பொன்சேகா-

fonsekaஇலங்கை தொடர்பில் மேற்கொள்ளும் ஜெனீவா விசாரணைகளின்போது சர்வதேச ஆலோசகர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என யுத்தத்தை முன்னெடுத்த இராணுவ தளபதி என்ற ரீதியில் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டதிட்டங்களை பின்பற்றியே யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், சட்டங்களை மீறியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் மூன்று வருடங்கள் தான் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானதாகவும், இந்த விடயம் தொடர்பில் உண்மையை கண்டறிய கட்டாயம் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுக வேலைத்திட்டம் 6 மாத காலத்துக்கு நீடிப்பு-

fort cityஇலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான ஒப்பந்த காலத்தை மேலும் 6 மாதத்துக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சூழலியல் பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டன. பின்னர் அது தொடர்பான முறையான மற்றும் முழுமையான சூழல் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையின் பிரகாரம் சில நிபந்தனைகளின் அடிப்படையிலும், திருத்தி கொள்ள வேண்டிய அம்சங்களுக்கிணங்கவும் மீள ஆரம்பிக்க பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை நிலையியல் குழுவின் சிபார்சு செய்துள்ளது. அதனடிப்படையில் குறித்த குறித்த கம்பனிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை 2016ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி முதல் மேலும் ஆறு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்-

journalistகடந்த காலங்களில் துன்புறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக கண்டறிந்து அவர்களுக்கு நியாயம் வழங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2005 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரையான காலப்பகுதிக்குள் தொழில்சார் ஊடகவியலாளராக பணியாற்றி அநீதிகள், துன்புறுத்தல்கள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகியவற்றை எதிர்கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இவ் விசேட குழுவின் மூலம் நிவாரணம் வழங்கப்படும். அநீதி இழைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் தமது தொழில்சார் அடையாளத்துடன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக உறுதிபடுத்தக்கூடிய அனைத்து தரவுகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும். இவ் அனைத்து தகவல்களும் 2016 ஜுன் 15ஆம் திகதிக்கு முன்னர் எஸ். ரி. கொடிகார ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை பேரவையில் அறிவிப்பு-

human raightsஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்ராட் அல்{ஹசைன், இலங்கை விவகாரம் தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

ஆணையாளர் அல் ஹ_சைன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்த விஜயம் குறித்து ஜெனீவாவில் இன்றையதினம் விளக்கமளிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அல்{ஹசைன் இன்று விடுக்கவிருக்கும் அறிவிப்பு இலங்கை தொடர்பில் சிறந்த விம்பத்தை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துக்கூறும் வகையில் அமையும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகாதார தொண்டர்கள் கவனவீர்ப்புப் போராட்டம்-

dsfdfddநிரந்தர நியமனம் வழங்கப்படும் என எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். விரைவில் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சு உறுதிப்பட (எழுத்து மூலம்) கடிதத்தை வழங்க வேண்டும் என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34 சுகாதாரத் தொண்டர்களும் தெரிவித்துள்ளனர். தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி மேற்படி தொண்டர்கள், பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதாரத் திணைக்கள அலுவலகம் முன்பாக இன்று இரண்டாவது நாளாக கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையில் காணப்பட்ட தொண்டர்கள் பற்றாக்குறை காரணமாக ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 6 மாதகாலம் ஒப்பந்தம் முடிந்த பின்னர், விரைவில் 700 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.அதில், 34 பேருக்கு முன்னுரிமையளிக்கப்படும் எனக்கூறி, மேலும் 3 மாதங்களுக்கு இவர்களுக்கான ஒப்பந்தத்தை வடமாகாண சுகாதார திணைக்களம் நீடித்தது. இவர்களுடைய 3 மாத ஒப்பந்தம், கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பணியில் இருந்து நிற்காமல் தொடர்ந்தும் வேதனமின்றி பணியாற்றி வருகின்றனர். வேதனமின்றி பணியாற்ற வேண்டாம், நியமனம் வழங்கப்படும்போது பணிக்கு வருமாறும் வடமாகாண சுகாதார திணைக்களத்தால் கூறப்பட்டுள்ளது. எனினும், தாங்கள் வேலையில் இருந்து நின்றுவிட்டால் தங்களை மறந்துவிடுவார்கள் என்றும், இதனால் தங்களுக்கான நியமனங்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக வேதனமின்றி தொடர்ந்தும் நாளொன்றுக்கு 9 மணித்தியாலங்கள் கடமையாற்றப் போவதாக சுகாதாரத் தொண்டர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.