மங்கையற்கரசி மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
 
mankai -kalaiஇலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானதையிட்டு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இரங்கல் வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 

‘தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும், இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நாவலர் அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு துணைவியார் மங்கையற்கரசி, நேற்றிரவு இலண்டன் மாநகரில் மறைந்து விட்டார் என்ற செய்தியினை இன்று காலையில் திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி தொலைபேசி வாயிலாகத் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தேன்.

கணவரும் மனைவியுமாக அந்தக் காலத்தில் என்னைச் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. நாவலர் அமிர்தலிங்கம் இலங்கையில் கொல்லப்பட்ட பிறகு, அம்மையார் அந்த நாட்டிலிருந்தே வெளியேறி தமிழகத்திலும், லண்டனிலும் வாழ்ந்து வந்தார்.

தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்தித்து உடல் நலம் விசாரித்துச் செல்வார். அம்மையாரின் மறைவுக்காக அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் உண்ணாவிரதம்

Unanavirathamதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கம் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர்.

நல்லிணக்க அரசே மௌனம் சாதிப்பது ஏன்?, அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!, சிறை வாழ்வுதான் தமிழருக்கு தலைவிதியா?, பதவிக்கு வரும்வரை வாக்குறுதி வந்த பின் மௌனம் ஏன்?, அரசியல் கைதிகளுக்கு மரணம் தான் தீர்வா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் தாங்கியவாறு அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்கு

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதம் இருக்கும் 13 தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலையினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அரச தரப்பு சட்டத்தரணி கூறினார்.

இதன் காரணமாக அவர்களை விடுதலை செய்வதற்கோ பிணை வழங்குவதற்கோ தற்சமயம் தீர்மானிக்க முடியாது என்று அரச தரப்பு சட்டத்தரணி கூறினார்.

நீதிமன்றில் தெரியப்படுத்தப்பட்ட விடயங்களை பரிசீலித்துப் பார்த்த கொழும்பு மேலதிக நீதவான் எரணி ஆட்டிகல, சந்தேக நபர்களை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்; இரண்டு மாதத்துள் 64 பேர் கைது
 
Fisherrஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 64 பேர், கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்சமயம் இந்திய மீனவர்களின் 86 படகுகள் இலங்கை அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதாக. கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கடற்றொழில் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அதேபோன்று இந்திய கடற்பரப்பில் அத்துமிறி மீன்பிடியில் ஈடுபட்ட 09 இலங்கை மீனவர்கள் அந்த நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 12 படகுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் எந்த வகையிலும் விடுவிக்கப்பட மாட்டாது என்றும். சட்டமுறைப்படி அவற்றை அரசுடமையாக்கும் நடவடிக்கைகள் எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.