எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானதாக இருக்கும் – செய்யித் அல் ஹுசைன்
நாட்டினுள்ள நிலையான சமாதானம், பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் அவர்களுக்கே உரித்தான முறையில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இதனுடன் தொடர்புடைய முக்கிய பல நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஆணையாளர் இவ்வாறு கூறியுள்ளார்.குறிப்பாக அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், சுயாதீன நிறுவனங்களை ஸ்தாபித்தல், சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளிப்படுத்த மற்றும் விவாதிக்க பொருத்தமான சூழலை உருவாக்கல் போன்றன இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஷேடமாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை நல்லிணக்கத்திற்கான முக்கிய நகர்வு என ஆணையாளர் கூறியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வைத்தல் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் கீழ் உள்ள காணிகளை விடுவித்தல் போன்றன விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கையை முழுமையாக செயற்படுத்த இலங்கையின் நீதிச் செயற்பாடுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதால் அடுத்த சில மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையினை எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள அமர்வின் போது சமர்பிக்க வேண்டும் என செய்யித் அல் ஹுசைன் கூறியுள்ளார்.