தமிழ்க் கைதிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளனர்
 
judegeஇலங்கையில் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்க் கைதிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிவித்ததை அடுத்து, தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கைதிகள் தெரிவித்துள்ளனர்.உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள், கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களை விடுதலை செய்வதா, அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதா என்பது தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிபதி முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான அரச தரப்பு வழக்கறிஞர், குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்தார்.

இந்த வழக்குகள் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய மேல் நீதிமன்றங்களில் தாக்கல்செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து, சந்தேகநபர்களை வரும் 23-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அவர்களுக்கு பிணை வழங்க தனக்கு அதிகாரங்கள் இல்லை என்று அறிவித்தார்.

தங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ள காரணத்தினால் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட கைதிகள் தீர்மானித்துள்ளதாக அவர்களின் வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.