தமிழகத்தில் தற்கொலை செய்த அகதி தொடர்பாக ஆராய்வு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க  அழுத்தம்.

electricதமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு, அவர்கள் விரும்பும் பட்சத்தில், இந்தியக் குடியுரிமையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமங்கலம், உச்சம்பட்டி அகதிகள் முகாமில் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் மனமுடைந்த இலங்கை அகதி ஒருவர் உயர்-அழுத்தம் கொண்ட மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் பற்றி அறிவதற்காக சென்றிருந்த உண்மை கண்டறியும் குழுவினர், அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து குழுவின் அமைப்பாளர் ஆர்.முரளி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: அகதிகள் முகாமில் இருப்பவர்கள் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஆஜராக வேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட ரவீந்திரனின் மகன் பிரதீபன் (13), ஹீமோபிலியோ நோயால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வருவாய்த் துறையினரின் கணக்கெடுப்பின்போது மருத்துவமனையில் இருந்து பிரதீபனை அழைத்து வரவியலவில்லை.

நிலையை எடுத்துக் கூறியும், அரசு மருத்துவர் தொலைபேசியில் பேசியும் வருவாய்த் துறையினர் ஏற்கவில்லை. அவரது பெயரை நீக்கிவிடுவோம் என வருவாய்த் துறையினர் கூறிய காரணத்தால் மனமுடைந்த ரவீந்திரன் உயர்அழுத்த மின்கம்பி ஏறி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது குடும்பத்துக்கு அரசு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பிரதீபனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் மிகவும் துயரமான நிலையில் வாழ்ந்துவருவதாக கூறுகின்றனர்.

பெரும்பாலும் 1990களிலிருந்து இந்த அகதி முகாம்களில் வாழும் இந்த மக்களுக்கு, இந்தியக் குடியுரிமை இல்லாத காரணத்தினால் அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த அகதிகளின் பிள்ளைகளும் குடியுரிமை இல்லாமல் தொழில் வாய்ப்புகளை பெறுவதில் சிரமப்படுவதாகவும், அவர்களுக்காவது குடியுரிமை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும் என்றும்.
இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான அழுத்தம் தமிழகத்திலிருந்து வரவேண்டும் என்றும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்