லஞ்ச ஊழல் தொடர்பாக பிரதமரிடம் கேள்வி எழுப்பிய நிருபர் கைது -மலேசியா

arestdமலேசிய அரசின் நிதியில் இருந்து சுமார் 680 மில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை மறுத்துவரும் பிரதமர் நஜீப், கடந்த சனிக்கிழமை போர்னியோ மாநிலத்தில் உள்ள ஒரு மசூதியில் இருந்து வெளியேவந்தபோது, அவரை நெருங்கிய இரு நிருபர்கள், ‘உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க விரும்புகிறீர்களா?’ என கேள்வி எழுப்பினர்.அரசின் பொது ஊழியரின் (பிரதமர்) கடமைகளில் இடையூறு செய்ததான குற்றச்சாட்டின்கீழ் அவுஸ்திரேலிய நாட்டின் பிரபல ஊடக நிருபர்களான அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் விடுதலையாகி உள்ளனர். அவர்களது கடவுச்சீட்டுக்களை பொலிசார் முடக்கி வைத்துள்ளனர்.

பத்திரிகை சுதந்திரத்தின்கீழ் உலகநாடுகளில் நடைபெறும் இதுபோன்ற ஊழல்களை அம்பலப்படுத்தும் முயற்சியின் ஒருகட்டமாகவே மலேசிய பிரதமரிடம் எமது நிருபர்கள் கேள்வி கேட்டனர். அவர்களை கைது செய்துள்ளது, துரதிர்ஷ்டவசமானது என அவிஸ்திரேலியாவின் ஏ.பி.சி. ஒலிபரப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த நிருபர்கள் இருவரையும் தாய்நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷப் கூறியுள்ளார்