சம்பூரில் 177 ஏக்கர் காணியை பொதுமக்களிடம் கையளிக்க நடவடிக்கை-

sampoor (2)திருகோணமலை சம்பூரில் கடற்படையினர் நிலைகொண்டிருந்த மீள்குடியேற்றக் கிராமத்திற்குச் சொந்தமான 177 ஏக்கர் காணியை பொதுமக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காணியை மக்களிடம் கையளிப்பதற்கான வைபவம் எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக திருமலை மாவட்ட செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. காணியை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த 237 ஏக்கரில் 60 ஏக்கர் காணி ஏற்கனவே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். அத்துடன் அந்தப் பகுதியிலிருந்த சம்பூர் மகா வித்தியாலயமும் புனரமைக்கப்பட்டு மீண்டும் இயங்கக்கூடிய நிலையில் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கூறியுள்ளார். 2006ஆம் ஆண்டில் சம்பூரிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் பத்து ஆண்டுகளின் பின்னர் அந்த காணிகள் மீண்டும் மக்களுக்கு கையளிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்திற்கான மற்றுமொரு காணாமற்போனோர் சாட்சி விசாரணை-

missingகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட பகுதிக்கான மற்றுமொரு கட்ட சாட்சி விசாரணை எதிர்வரும் 25 ஆம்திகதி ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்த சாட்சி விசாரணைக அமர்வுகளை நடத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச குறிப்பிட்டுள்ளார். இதன் பிரகாரம் எதிர்வரும் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், 28 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்திலும், 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வ்வுனியா பிரதேச செயலகத்திலும் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை குறித்து சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளன. இந்த அமர்வுகளின்போது காணாமல் போனோர் தொடர்பில் புதிய முறைப்பாடுகளையும் முன்வைக்க முடியுமென அந்த ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார். 27ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள அமர்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு மக்களுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இம்மாதம் முதலாம் திகதி வரை பொதுமக்களிடமிருந்து சுமார் 19 ஆயிரத்து ஆறு முறைப்பாடுகளும், பாதுகாப்புத் தரப்பில் காணாமற்போனோர் தொடர்பில் சுமார் ஐயாயிரம் முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கிளிநொச்சியில் 3 மாணவர்களைக் காணவில்லை-

missingகிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவரைக் காணவில்லை என, அம்மாணவர்களது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றுக்காலை பாடசாலைக்குச் சென்ற மேற்படி மூன்று மாணவர்களும், நேற்றுமாலை வரை வீடு திரும்பவில்லை.

பெற்றோர் மற்றும் உறவினர்களால் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனையடுத்தே, சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பரந்தன் 11ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த தம்பிராசா ராகுலன், பிரபாகரன் பிரவீன், இந்திரன் இறைவாணன் ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள், தரம் ஒன்பது மற்றும் தரம் பத்தில் கல்வி கற்கின்ற 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் விபத்தில் இருவர் காயம்-

xcxcxcமன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று அதிசாலை 5.45அளவில் மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேட்டையார் முறிப்பு பிரதான வீதியில் இடம்பெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம், வேட்டையார் முறிப்பு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் உள்ள மதகுடன் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளை அலுவலக சாரதி மற்றும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மன்னார் போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.