முல்லைத்தீவில் 5,612 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்-
முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட 5,612 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் வாழ்ந்து வருவதாக மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மணலாறு, மாந்தை கிழக்கு, துணுக்காய் முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 41,322 குடும்பங்களில் 5,612 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் போரில் தமது துணையை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை காணாமல்போன நிலையிலும் பல பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றனர். அத்துடன் போரின் பின்னர் குடும்ப பிணக்குகளாலும் பெண்கள் குடும்பத்திற்கு தலைமை ஏற்றுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் முடிந்து 7 வருடங்கள் கடந்தபோதும் இவர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் அங்கங்களை இழந்தநிலையில் 2,151 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். எவ்விதமான உதவிகளுமற்ற நிலையில் பல நெருக்கடிகளுக்கு இவர்கள் முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கைதிகளுக்கு பாய்களுக்கு பதிலாக மெத்தைகள்-
கைதிகளுக்கு வசதியாக பயன்படுத்தக் கூடிய வகையிலான மெத்தைகளை பெற்றுக் கொடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் தூங்குவதற்காக தற்போது பாய்களே வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களுக்காக மெத்தைகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்தத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட மெத்தைகளையே கைதிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மெத்தைகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தாலேயே தயாரிக்கவும், இதன் முதல்கட்ட நடவடிக்கையை கொழும்பு வெலிகடை சிறைச்சாலை பெண்கள் பிரிவில் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் பாய்களுக்கு பதிலாக மெத்தையையே பெற்றுக் கொடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முதலமைச்சர்கள் மாநாடு, முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் புறக்கணிப்பு-
32 ஆவது முதலமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று ஹிக்கடுவையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. ஏனைய 8 மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் மாகாணசபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்துள்ளனர். அத்துடன் நாளை 23ஆம் திகதி இடம்பெறும், வாராந்த அமைச்சரவை மாநாட்டுக்கு வருகைதந்து, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளைப் பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைக்குமாறு அம்மாநாட்டில் பங்கேற்றிருந்த ஏனைய எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்களிடம், ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இம்மாநாட்டில் பங்கேற்காமைக்கான காரணம் தெரியவரவில்லை. அவர் நேற்று யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மாணவரின் கல்வியை சீர்குலைக்க வேண்டாமென மகஜர்-
துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மாணவர்களின் கல்வியை சீர்குலைக்காமல், கல்வி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, மாணவர்களின் பெற்றோர் வடமாகாணக் கல்வி அமைச்சரிடம் நேற்று மகஜர் கையளித்துள்ளனர். வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு முன்பாக ஒன்றுகூடிய பெற்றோர், கல்வி அமைச்சர் குருகுலராஜாவிடம் குறித்த மகஜரைக் கையளித்து விரைவில் தீர்வை முன்வைக்குமாறு கோரியுள்ளனர். துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி, ஒரே நாளில் 200 வரையான ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்லாது திணைக்களத்தில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவைதானா ஆசிரியர்களின் கடமை? இவ்வாறு இவர்கள் பணியைப் புறக்கணித்து மாணவர்களின் கல்வியைப் பாழடிக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டிய பெற்றோர், துணுக்காய் கல்வி வலயப் பிரச்சினைகளுக்கு, கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இளம் பெண் சட்டத்தரணி சடலமாக மீட்பு-
அம்பாறை, அக்கரைப்பற்று 9ஆம் பிரிவைச் சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணியான லோ. நிதர்சினி (வயது-27) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 10 மணியளவில் இந்த சடலம் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா, தற்கொலையா என்பது குறித்து உறுதி செய்யப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..!(படங்கள் இணைப்பு)-
சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே!
கடந்த வருடம் புங்குடுதீவின் வல்லன் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு துர்ப்பாக்கிய சம்பவத்தினைத் தொடர்ந்து வல்லன், வீராமலை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மிகவும் தொலைவிலுள்ள புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பதற்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இத்தகையதொரு நிலையில் புங்குடுதீவு மகாவித்தியாலய நிர்வாகம் மற்றும் அப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய மேற்படி மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள் இவ்வருடம்(2016) ஜனவரி மாதம் முதல் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more