கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு-

airportபிரசல்ஸில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டிருப்பதாக அந்த அதிகார சபை கூறியுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் விமான நிலைய பாதுகாப்பு சம்பந்தமாக வௌ;வேறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் எனினும் நேற்றைய தினம் முதல் விமான நிலையத்திற்கு மேலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகார சபை கூறியுள்ளது. பயணிகளின் அனைத்துப் பயணப் பொதிகளும் பல இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன்மூலம் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பயணிகள் தொடர்பில் தாம் மனம் வருந்துவதாகவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை கூறியுள்ளது.

சம்பூரில் 177 ஏக்கர் காணிகள் விடுவிப்பு-

sampoorதிருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடற்படை வசமிருந்த 177 ஏக்கர் காணிகளை விடுவித்து, அவை நாளை மறுதினம் பொதுமக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படும் காணியில் மொத்தமாக 546 குடும்பங்கள் மீள்குடியேறவுள்ளன என திருமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான என்.ஏ.ஏ. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதன்போது, சம்பூர் மகா வித்தியாலயம் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்படும். இக் காணிகளை மக்களுக்கு கையளிக்கும் வைபவம் வெள காலை 10 மணிக்கு சம்பூரில் நடைபெறவுள்ளது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமரின் பயணத்தை ஒளிப்பதிவு செய்தவர் கைது-

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாகனப் பயணத்தை தமது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த இளைஞன் ஒருவர் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பிரதமர் கொள்ளுப்பிட்டி வழியாக சென்றுகொண்டிருக்கும்போது, குறித்த இளைஞன் அதனை ஒளிப்பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதானவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, விசாரணைகளைத் தொடர்ந்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாஜூடினின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு-

tajudeenபடுகொலை செய்யப்பட்ட றக்பி வீரர் வசிம் தாஜூடினின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய தினம் இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேலதிக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வழக்கு தொடர்பான முழு அறிக்கைகையும் விரைவில் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை-

afghan_isisஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை இலங்கையிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் துணை அமைப்பான ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பில் மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த பலர் இணைந்து கொண்டுள்ளதாகவும் ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது

இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் கட்டியெழுப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். உலகில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் கட்டியெழுப்படுவதற்கான அடிப்படையாக இருக்கும் வழிகளை மூட வேண்டும். மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் அதிகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக உலக செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நாடுகளை சேர்ந்த பலர் இலங்கையில் வசித்து வருகின்றனர். இதனால், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை தேடிக்கண்டு பிடிக்க தேவையான சட்ட வரைவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் இதற்கு அமைவாக இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றையும் முன்வைப்பதாக ஹெல பொது சவிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.