நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது-பாதுகாப்புச் செயலர்-
சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி, நாட்டின் பாதுகாப்பு குறித்து விஷேட வேலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை அனுப்பி கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற சில அனாமதேய அழைப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எது எவ்வாறிருப்பினும் நாட்டின் பாதுகாப்பு தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலர் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.
வவுனியாவில் இராணுவக் குடியிருப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-
வவுனியாவில் இராணுவத்தினருக்கு குடியிருப்பு வீடுகள் நிர்மாணிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தம்முடன் முன்னரே கலந்தாலோசிக்கவில்லை என்பதால், இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களால் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தின் கருப்பொருளின் நியாயத்தன்மையைக் கருத்திற்கொண்டு இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என்றனர்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று நடைபெற்ற போதே, சபை மண்டபத்தில் உறுப்பினர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
கொழும்பில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அமர்வு-
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பிலுள்ள தமிழ் மக்களின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயற்பாடு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள தமிழ்ச் சங்கம் மண்டபத்தில் நடைபெறும் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரையும் வருகை தந்து தமது கருத்துக்களை முன்வைக்குமாறு தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, மிக விரைவில் தீர்வுத்திட்ட முன்மொழிவு முழுமையாகத் தயாரிக்கின்ற பணி ஆரம்பிக்கப்படவுள்ளதால், எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் pழடவைiஉயடளரடி;வயஅiடிநழிடநளஉழரnஉடை.ழசப என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது ூ94 75 6993211என்ற இலக்கத் தொலைபேசி ஊடாகவோ அனுப்பிவைக்குமாறு தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யாழ். கண்காட்சியில் பிரபாகரனின் கைவிரல் அடையாளம்-
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் சாட்சியங்கள் இரண்டாவது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.யாழ். பொது நூலகத்தின் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
கடந்த 6 தசாப்தங்களுக்கு முன்னால் இருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய அரிய புகைப்படங்கள், இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமான மத்திய வங்கி மீதான குண்டுத்தாக்குதலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கைவிரல் அடையாளங்கள் என்பனவும் இந்தக் கண்காட்சியில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரவி கருணாநாயக்க மற்றும் ஜோன் அமரதூங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை-
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 37பேர் கையெழுத்திட்ட குறித்த பிரேரணை, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனை அடங்களாக பாராளுமன்றத்தில் தவறான தகவல்களை வழங்கியமை போன்ற காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் முன்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமைச்சர் ஜோன் அமரதூங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக, மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி கூறியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் பாராளுமன்றத்தில் நேற்று வினவிய கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பிழையான தகவல்களை வழங்கியுள்ளதன் மூலம், பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக, மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.