கம்உதாவ திட்டம் மீண்டும் உதயம்-சஜித் பிரேமதாச-

gam udawaகம்உதாவ வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அது தொடர்பில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. கம்உதாவ வேலைத் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 5 ஆண்டுகளில் 25 மாவட்டங்களிலும் வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். அதன்படி இந்த ஆண்டு புதிய கம்உதாவ வேலைத்திட்டம் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் யோசனையில் கம்உதாவ திட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் அது தேசத்திற்கு மகுடம் என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டது. அனைத்து கம்உதாவ திட்டங்களின்போது இதற்கு முன்னர் போன்று கலாச்சார ரீதியான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதோடு, அதற்கான நிதியை தனியார் நிறுவனங்களினுடாக பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால் செலவிடப்படும் நிதி, வீடுகளை நிர்மாணிப்பதற்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மாத்திரம் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் பற்றிய உண்மைகளை கண்டறிவது மிக முக்கியமானது-சந்திரிகா குமாரதுங்க-

chandrikaபோர் பற்றிய உண்மைகளை கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை நோக்கி முன்நகர வேண்டுமாயின் போர் பற்றிய பின்னணி மற்றும் அது குறித்த ஏதுக்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உண்மை அறியும் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உண்மையை கண்டறியும் பொறிமுறைமையை சீர்குலைப்பதற்கு சில அரசியல் தலைமைகள் முயற்சித்து வருகின்றனர். போரின் பின்னரும் போரின் போதும் சில அரசியல் தரப்புக்கள் மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தவே முயற்சித்து வருகின்றனர். போர் காரணமாக உறவுகளைப் பிரிந்தவர்கள் காணாமல் போனவர்கள் வடக்கு கிழக்கில் மட்டும் இல்லை, தெற்கிலும் இருக்கின்றார்கள். புதிய அரசாங்கம் உண்மையைக் கண்டறிவது தொடர்பிலான பொறிமுறைமையை உருவாக்கி வருகின்றது. கடந்த காலங்களில் வெறுமனே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிப்பு-இராணுவப் பேச்சாளர்-

jeyanath vijeweeraஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் 24 மணித்தியாலங்களும் கண்காணித்து வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

பிரஸெல்ஸ் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பில் கூறுகையில், இராணுவப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரஸெல்ஸ் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பூர் மீள்குடியேற்ற மக்களுக்கு வீடுகள் கையளிப்பு-

dsfdfdfதிருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (25.03.2016) வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது 18 பயனாளிகளுக்கு கனடா தமிழ்ப் பேரவையினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பொதுமக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 2006ம் ஆண்டு அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு தற்போது சொந்த வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீனவர் பிரச்சினை குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்தியாவில் பேச்சு-

mahindaஇலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவிற்காக விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மே மாதம் நடுப்பகுதியில் இந்தியா நோக்கி விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் அமைச்சரின் இந்த விஜயம் அமையவுள்ளது.