முல்லைத்தீவில் காணாமல் போனோர் தொடர்பான 3ஆம் நாள் விசாரணைகள்-

missingகாணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகள், குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 3வது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில், துணுக்காய், மாந்தை கிழக்கு, கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவு மக்கள் சாட்சியமளிக்க வருகை தந்திருந்தனர். இதன்போது, காணாமல் போன உறவுகளை காட்டுவதாகவும் விடுவிப்பதாகவும் கூறி பணங்களை இழந்த சிலரும் ஆதாரத்துடன் சாட்சியமளித்தனர். இந்நிலையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்ற தமது உறவுகள் எங்கே என ஆணைக்குழு முன்னிலையில் முல்லைத்தீவு மக்கள் இன்று வினவினர். இவ் ஆணைக்குழு முன்னிலையில், கடந்த 25ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை 466 பேர் சாட்சியமளித்துள்ளனர். இன்றைய தினத்தில் மாத்திரம் 206 பேரிடம் சாட்சிங்கள் பதிவு செய்யப்பட்டதாக, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ குணதாச தெரிவித்துள்ளார். இதன்போது, புதிததாக 137 முறைப்பாடுகளையும் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைய சாட்சி விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தவர்களில் பலர் சமூகமளித்து சாட்சியமளித்திருந்தனர். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நாளையதினம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

மீளக் கையளிக்கப்பட்ட காணிகளை துப்புரவு செய்த சம்பூர் மக்கள்-

sampurதிருகோணமலை சம்பூரில் கடற்படையினர் மீளக்கையளித்த காணிகளை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் இன்றையதினம் மக்கள் ஈடுபட்டிருந்தனர். சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த 177 ஏக்கர் காணி நேற்றுமுன்தினம் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டில் நிலவிய யுத்தம் காரணமாக சம்பூரிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் அவர்களின் காணிகள் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலும் முகாம்களிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்கள் இன்று காலை முதல் தமது சொந்தக் காணிகளை துப்புரவு செய்தனர். சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த 237 ஏக்கரில் 60 ஏக்கர் காணி ஏற்கனவே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்தும் கடற்படையினர் நிலைகொண்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் போராட்டங்களையும் நடத்தியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

போதைப்பொருள் கொண்டுவருவதை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை-

jailசிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டுவருவதை தடுப்பதற்கு பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதற்கட்டத்தை வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னெடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய கூறியுள்ளார்.

சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளுள் 60 வீதத்திற்கும் மேற்பட்டோர் போதைப் பொருட்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அதிக கைதிகள் சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் கூறியுள்ளார் இந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் பொலிஸாருடன் இணைந்து மோப்ப நாய்களை பயன்படுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது-

electricityநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட மின் தடை நிலைமை தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.07 அளவில் இவ்வாறு மின் வெட்டு நிலை தொடர்பில் பதிவாகியிருந்ததாக, இலங்கை மின்சார சபை கூறியிருந்தது.

தென் மாகாணம், நுவரெலியா, பதுளை, பொலன்னறுவை, குறுநாகல் உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இந்த நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் பல பிரதேசங்களில் மின்சார தடை இவ்வாறு ஏற்பட்டிருந்தது.

இதன்போது மின்சார விநியோக மார்க்கங்கள் சில செயலிழந்திருந்தன. இதனைத் தொடர்ந்து மினசார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரந்தன் விபத்தில் ஆறுபேர் படுகாயம்-

fghghgகிளிநொச்சி பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில், ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கப் ரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் வாகனத்தில் பயணித்த அறுவர் படுகாயமடைந்ததாகவும், கப் ரக வாகனமும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.