மழையையும் பொருட்படுத்தாது போராடிய மாணவர்கள்-
மட்டக்களப்பு, வாகரை – கட்டுமுறிவுகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள், திருகோணமலை பிரதான வீதியின் இரு பக்கமும் அமர்ந்து மழையில் நனைந்த வண்ணம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, எப்ப ஆசானைத் தருவீர்கள், நல்லாட்சி அரசாங்கமே நலமாக வாழ உடன் தீர்வு தாருங்கள், எங்கள் கனவை நனவாக்க நல்ல அரசாங்கமே நல்ல ஆசானை தா, வாய் பேச்சு வேண்டாம் நடைமுறைப்படுத்து, தீர்வைப் பெற்றுத் தாருங்கள், கல்வியே வாழ்வின் ஒளி, பாடசாலை வரலாற்றில் ஆங்கில பாடம் கற்பிக்க வேண்டும், எமது உரிமையைப் பெற்றுத் தாருங்கள், காலத்தை வீணாக்காதே உடன் தீர்வு வழங்கவும், மிக விரைவில் நியமனம் பெற்றுத் தர வேண்டும், எங்களது கல்வியைத் தாருங்கள் என பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். இதில் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இப் பாடசாலையானது கதிரவெளி பிரதான வீதியிலிருந்து 19 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மிகவும் கஷ்டப் பிரதேச பாடசாலையாகும். இங்கு தரம் 11 வரை 170 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அத்தோடு இங்கு 06 ஆசிரியர்கள் மாத்திரம் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். கடந்த 2009ம் ஆண்டு தரம் 10, 11 வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் 14 ஆசிரியர்கள் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றமையால் தற்போது அதிபர் உட்பட 07 பேரைக் கொண்டு காணப்படுவதால் தமது கல்வி நிலை பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். இங்கு தமிழ், கணிதம், ஆங்கிலம், வரலாறு, சமயம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் இல்லை, இதனால் எமது கல்வி நிலை பாதிக்கப்படுகின்றது. எனவே தமது பாடசாலைக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமித்து எங்களது கல்வி அறிவை கூட்டுமாறு மாணவர்கள் மேலும் தெரிவித்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஷ்ணராஜா ஆகியோர் வருகைதந்து ஒருவாரத்திற்குள் மூன்று ஆசிரியர்களை வழங்குவதுடன், மேலும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்களின் அடிப்படையில் கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படுமென கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஷ்ணராஜா உறுதியளித்தார். இதன்போது கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் மகஜர் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டது