சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு-

ereeeதிருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் இந்திய உதவியுடனான அனல் மின் நிலையத்திற்கு உள்ளுர் மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தும் வலுப்பெற்று வருகின்றது. அனல் மின் நிலையத்தின் தாக்கம் பற்றி நேரில் அறிந்து கொள்வதற்காக ஏற்கனவே அனல் மின் நிலையம் அமைந்துள்ள புத்தளம் மாவட்டம் நுரைச்சோலை பகுதிக்கு மூதூர் கிழக்கு பிரதேச சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று திங்கட்கிழமை அங்கு சென்று திரும்பியுள்ளது. அனல் மின் நிலையத்தை உள்ளே சென்று பார்வையிடுவதற்கான வாய்ப்பு இக்குழுவினருக்கு கிடைக்கவில்லை. அவர்களால் சுற்றுப்புற பகுதியை மட்டுமே அவதானிக்க முடிந்துள்ளது. திருகோணமலை பசுமை இயக்கத்தினால் அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் உள்ளுர் மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அதன் தாக்கம் பற்றி கேட்டறிந்துள்ளனர். போர்க் காலத்தில் சம்பூர் பிரதேச மக்கள் அந்த பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்த போது, அந்த பகுதியில் அனல் மின் நிலையத்திற்கு என சுமார் 500 ஏக்கர் காணி அடையாளமிடப்பட்டு அதற்கான ஆரம்ப வேலைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அனல் மின் நிலையமொன்று அமையும் பகுதியில் மக்களுக்கும் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை நுரைச்சோலை பகுதியை நேரடியாக பார்வையிட்ட பின்னரே தங்களால் உறுதிப்படுத்திக் கொண்டதாக அங்கு சென்ற திரும்பிய குழுவினர் தெரிவிக்கின்றனர். போருக்கு பின்னர் சம்பூர் பிரதேசத்தில் தற்போது தான் மக்கள் மீளக்குடியேறி வருகின்ற நிலையில் அனல் மின் நிலையத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக நுரைச்சோலைக்கு சென்று திரும்பிய சம்பூர் பிரதேச மீனவர் சங்கத்தின் தலைவரான மயில்வாகனம் கிருஸ்ணபிள்ளை தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனல் மின் நிலையம் அமைந்துள்ள நுரைச்சோலைப் பகுதியில் தென்னை போன்ற பயிர்கள் கருகிய நிலையில் இருப்பதை தங்களால் அவதானிக்க முடிந்தது. அந்த பகுதி மக்களின் பிரதான வாழ்வாதரமான மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இழப்பீடுகள் வழங்கலில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என்றும் உள்ளுர் மக்கள் எங்களிடம் கூறி கவலைப்பட்டுக் கொண்டனர். குறிப்பாக அனல் மின் நிலையத்தில் எரிக்கப்பட்ட நிலக்கரியின் சாம்பல் பாதுகாப்பற்ற நிலையில் வெளியே குவிக்கப்பட்டுள்ளதையும் காண முடிந்துள்ளது என அவர் பிபிசிக்கு கூறியுள்ளார்.