பயணிகள் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸில் தரையிறக்கம்-
எகிப்து நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதாகவும், அது சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. பயணிகள் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தியிருக்கலாம் எனவும், விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. குறித்த விமானம் எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ நகர் நோக்கி புறப்பட்டிருந்தது. இதேவேளை, கடத்தப்பட்ட விமானம் சைப்ரஸ் நாட்டின் லார்நக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது எனவும் இதில் 80 பயணிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த நான்கு வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் 11 ஊழியர்கள் தவிர்த்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏனைய அணைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற குறித்த விமானத்தை, அதில் இருந்த பயணி ஒருவரே கடத்தியதாக விமானி கூறியுள்ளார் என ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும், அந்த பயணி, உடலுடன் வெடிகுண்டுகளை கட்டியிருப்பதாக மிரட்டல் விடுத்ததாகவும் விமான குறிப்பிட்டுள்ளார். இதேவேளை விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு தொடர்பில்லை என சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாஸியட்ஸ் தெரிவித்துள்ளார். தன்னிடமிருந்து பிரிந்து சென்ற சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த தனது மனைவியை சந்திக்க வேண்டும் எனவும் சைப்ரஸில் தனக்கு தஞ்சம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து இப்ராஹிம் சமஹா என்பவர் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாக சைப்ரஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்ராஹிம் சமஹாவின் மனைவி விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து, இந்த விமானக் கடத்தல் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கை அல்லவென சைப்ரஸின் அதிபர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.