மட்டக்களப்பில் வைத்தியர்கள் ஆர்பாட்டம்-

677மாலபேயில் அமைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியை அரசு பொறுப்பேற்குமாறு கோரி இன்று நண்பகல் மட்டக்களப்பில் வைத்தியர்களினால் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணிகள் என்பன நடாத்தப்பட்டன. மட்டக்களப்பு வைத்தியதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த இப்போராட்டம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக பேரணியாக ஆரம்பித்து மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்காவில் நிறைவடைந்து அங்கு ஆர்பாட்டம் நடைபெற்றது. பெரும் எண்ணிக்கையிலான வைத்தியதிகாரிகள் இதில் பங்கு கொண்டிருந்தனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள எட்கா ஒப்பந்தத்தினை நிறுத்துமாறு கோரியும் மாலேபே தனியார் பல்கலைக்கழகத்தினை அரசு பொறுப்பேற்குமாறு வலிறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பம்பலப்பிட்டி மின் பிறப்பாக்கியில் தீ விபத்து-

trnasformer blastகொழும்பு பம்பலபிட்டிய லோரிஸ் வீதி பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் பிறப்பாக்கியில் இன்றுகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனம் இரண்டு அனுப்பட்ட போதிலும் அந்நேரத்தில் பிரதேச மக்கள் தீயை அணைத்துள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. குறுகிய காலப்பகுதியில் இலங்கையில் மின் பிறப்பாக்கியில் விபத்து இடம்பெற்ற மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். மின்பிறப்பாக்கிகளை இலக்கு வைத்து, நாசகார கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியுள்ளன. இந்நிலையில் இன்றையதினமும் பம்பலப்பிட்டியில் மின்பிறப்பாக்கி தீ பற்றிக் கொண்டமையால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேக நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செங்கலடி பிரதேசசபை செயலாளரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்-

dertrமட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேசசபை செயலாளரின் நிர்வாக மந்தநிலை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து இன்று பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. உள்ளூராட்சி நிர்வாகத்தினால் செய்து முடிக்கப்பட வேண்டிய பல கருமங்களை குறித்த செயலாளர் செய்து முடிக்காது வினைத்திறனற்ற முறையில் காலங்கடத்துவதாகவும், அதனால் இப் பிரதேச சபைப்பிரிவில் பலவகையான நிர்வாகச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த செயலாளரை உடன் இடமாற்றம் செய்து வினைத்திறனுள்ள ஒருவரை செயலாளராக நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். இங்கு சமூகமளித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், குறித்த பிரச்சினை குறித்து தான் அக்கறை கொண்டுள்ளதாகவும் மக்களின் கோரிக்கைக்கிணங்க வினைத்திறனுள்ள செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்துடன், அங்கு சமூகமளித்திருந்த மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், நிர்வாக ரீதியிலான நடைமுறைகளுக்கேற்ப பொதுமக்களின் கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படும். பிரதேச சபைச் செயலாளருக்கு இடமாற்றக் கடிதம் கிடைத்துள்ளபோதும், நிர்வாக ரீதியான நடைமுறைகளுக்கேற்ப அவர் மேன்முறையீடு செய்துள்ளார். அதன்படி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 14 இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டம்-

ertrtrtதமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 14 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் தற்போது 16 இலங்கைத் தமிழர்கள், ஒரு நைஜீரியர் என 17 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மகேந்திரன் என்ற இலங்கைத் தமிழர், தன்னை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். 3-வது நாளாக நேற்றும் அவரது போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி, இதே முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 13பேர் நேற்றுக்காலை முதல் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். தகவலறிந்த கியூபிரிவு டிஎஸ்பி பால்வண்ணநாதன், முகாம்களுக்கான தனித்துணை ஆட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் அங்கு சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அவர்கள் அளித்த கடிதத்தை அரசுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். எனினும், அதை ஏற்க மறுத்து, 14 பேரும் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.