சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்பு-
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 வீதியில் அமைந்துள்ள மறவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியும், வெடிகுண்டுகளும், துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடிபொருட்களை மீட்டுள்ளனர். இதன்போது தற்கொலை அங்கியொன்று, 4 கிளேமோர் குண்டுகள், கிளேமோர் பெட்டரி 2, 12 கிலோ வெடிமருந்து, 100 துப்பாக்கி ரவைகள், மற்றும் 5 சிம்கார்ட்கள என்பன மீட்கப்பட்டுள்ளன. அந்த வீட்டில் இருந்த சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகநபர் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து இன்றுநண்பகல் 12மணியளவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான எட்வேட் ஜூட் (வயது 31) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வீட்டில் இருந்த பெண் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.