வேலையற்ற பட்டதாரிகள் தொழில் உரிமைப் போராட்டம்-

3343வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் தொழில் உரிமைப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகில இலங்கை ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் இன்றுகாலை 10.30 அளவில் மட்டக்களப்பு – காந்திப் பூங்கா முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் “அரசே! ஊடனடியாக வேலை வாய்ப்பை வழங்கு, தொழில் உரிமை எமது சுதந்திரம், நாங்கள் பெற்ற பட்டம் காற்றில் பறக்கவிடும் பட்டமா?, பட்டதாரிகளுக்கான தேசிய கொள்கையை தயாரி, நல்லாட்சி அரசில் பட்டதாரிகள் தொடர்ந்தும் ஏமாறுவதுதான் நிலையா? உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை ஒண்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் தம்மிக முணசிங்க, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் தெ.கிஷாந்த், மதகுருமார்கள், ஆசிரியர் சங்கங்கள், மாதர் சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஒண்றிணைந்த பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள், மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது, வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமை தொடர்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை துரிதப்படுத்துவதுடன், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம்-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏறாவூர் ஐயங்கேனி ஜின்னா வீதியில் அமைக்கப்பட்டுள்ள பாரிய கிழக்கு ஆடைத்தொழிற்சாலை மற்றும் கைத்தறி உற்பத்தி தொழிற்சாலை என்பவற்றை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார். பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகும் இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக ஜனாதிபதியும், ஏனைய அதிதிகளாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுனர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த கைத்தொழில் பேட்டையின்மூலம் கிழக்கில் சுமார் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தை செல்வாவின் 118ஆவது ஜனனதினம்-

thanthaiமூதறிஞர் தந்தை செல்வாவின் 118ஆவது ஜனனதின வைபவம் தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் இன்றுகாலை 9.30அளவில் யாழ்; நகரிலுள்ள தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் தலைவர் ஜெபநேசன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அனுவிக்கப்பட்டு மலராஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னாள் பேராயர் ஜெபநேசன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் ஜனனதின நிகழ்விலே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.