Header image alt text

மழையையும் பொருட்படுத்தாது போராடிய மாணவர்கள்-

sdsdsdமட்டக்களப்பு, வாகரை – கட்டுமுறிவுகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள், திருகோணமலை பிரதான வீதியின் இரு பக்கமும் அமர்ந்து மழையில் நனைந்த வண்ணம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, எப்ப ஆசானைத் தருவீர்கள், நல்லாட்சி அரசாங்கமே நலமாக வாழ உடன் தீர்வு தாருங்கள், எங்கள் கனவை நனவாக்க நல்ல அரசாங்கமே நல்ல ஆசானை தா, வாய் பேச்சு வேண்டாம் நடைமுறைப்படுத்து, தீர்வைப் பெற்றுத் தாருங்கள், கல்வியே வாழ்வின் ஒளி, பாடசாலை வரலாற்றில் ஆங்கில பாடம் கற்பிக்க வேண்டும், எமது உரிமையைப் பெற்றுத் தாருங்கள், காலத்தை வீணாக்காதே உடன் தீர்வு வழங்கவும், மிக விரைவில் நியமனம் பெற்றுத் தர வேண்டும், எங்களது கல்வியைத் தாருங்கள் என பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். இதில் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இப் பாடசாலையானது கதிரவெளி பிரதான வீதியிலிருந்து 19 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மிகவும் கஷ்டப் பிரதேச பாடசாலையாகும். இங்கு தரம் 11 வரை 170 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அத்தோடு இங்கு 06 ஆசிரியர்கள் மாத்திரம் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.  Read more

முல்லைத்தீவில் காணாமல் போனோர் தொடர்பான 3ஆம் நாள் விசாரணைகள்-

missingகாணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகள், குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 3வது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில், துணுக்காய், மாந்தை கிழக்கு, கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவு மக்கள் சாட்சியமளிக்க வருகை தந்திருந்தனர். இதன்போது, காணாமல் போன உறவுகளை காட்டுவதாகவும் விடுவிப்பதாகவும் கூறி பணங்களை இழந்த சிலரும் ஆதாரத்துடன் சாட்சியமளித்தனர். இந்நிலையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்ற தமது உறவுகள் எங்கே என ஆணைக்குழு முன்னிலையில் முல்லைத்தீவு மக்கள் இன்று வினவினர். இவ் ஆணைக்குழு முன்னிலையில், கடந்த 25ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை 466 பேர் சாட்சியமளித்துள்ளனர். இன்றைய தினத்தில் மாத்திரம் 206 பேரிடம் சாட்சிங்கள் பதிவு செய்யப்பட்டதாக, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ குணதாச தெரிவித்துள்ளார். இதன்போது, புதிததாக 137 முறைப்பாடுகளையும் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைய சாட்சி விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தவர்களில் பலர் சமூகமளித்து சாட்சியமளித்திருந்தனர். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நாளையதினம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

மீளக் கையளிக்கப்பட்ட காணிகளை துப்புரவு செய்த சம்பூர் மக்கள்-

sampurதிருகோணமலை சம்பூரில் கடற்படையினர் மீளக்கையளித்த காணிகளை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் இன்றையதினம் மக்கள் ஈடுபட்டிருந்தனர். சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த 177 ஏக்கர் காணி நேற்றுமுன்தினம் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டில் நிலவிய யுத்தம் காரணமாக சம்பூரிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் அவர்களின் காணிகள் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலும் முகாம்களிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்கள் இன்று காலை முதல் தமது சொந்தக் காணிகளை துப்புரவு செய்தனர். சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த 237 ஏக்கரில் 60 ஏக்கர் காணி ஏற்கனவே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்தும் கடற்படையினர் நிலைகொண்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் போராட்டங்களையும் நடத்தியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

போதைப்பொருள் கொண்டுவருவதை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை-

jailசிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டுவருவதை தடுப்பதற்கு பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதற்கட்டத்தை வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னெடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய கூறியுள்ளார்.

சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளுள் 60 வீதத்திற்கும் மேற்பட்டோர் போதைப் பொருட்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அதிக கைதிகள் சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் கூறியுள்ளார் இந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் பொலிஸாருடன் இணைந்து மோப்ப நாய்களை பயன்படுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது-

electricityநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட மின் தடை நிலைமை தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.07 அளவில் இவ்வாறு மின் வெட்டு நிலை தொடர்பில் பதிவாகியிருந்ததாக, இலங்கை மின்சார சபை கூறியிருந்தது.

தென் மாகாணம், நுவரெலியா, பதுளை, பொலன்னறுவை, குறுநாகல் உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இந்த நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் பல பிரதேசங்களில் மின்சார தடை இவ்வாறு ஏற்பட்டிருந்தது.

இதன்போது மின்சார விநியோக மார்க்கங்கள் சில செயலிழந்திருந்தன. இதனைத் தொடர்ந்து மினசார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரந்தன் விபத்தில் ஆறுபேர் படுகாயம்-

fghghgகிளிநொச்சி பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில், ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கப் ரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் வாகனத்தில் பயணித்த அறுவர் படுகாயமடைந்ததாகவும், கப் ரக வாகனமும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மீள்குடியேற்றிய மக்களுக்கு வீடுகள் கையளிப்பு-

ertrtttஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடியாறு கிராமங்களில் மீள்குடியேறிய மக்களுக்கு புதிதாக அமைக்கப்பட்ட 201 வீடுகளில் 100 வீடுகள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வு, இன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சரால் வீடுகளுக்கான பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவ்வீடுகள் தலா 2 இலட்சம் ரூபாய் செலவில் புனர்வாழ்வு அமைச்சினால் நிர்மானிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் கதிர்காம யாத்திரிகைகளுக்கான யாதிரியகள் தங்கிச் செல்லும் மண்டபத்துக்கான அடிகல் நட்டுவைத்ததுடன், மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சில அமைச்சுக்களை பிரதமரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை-

rajitha ranilசெயற்பாட்டுத் திறனற்ற அமைச்சுகளின் நடவடிக்கைகளை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு செயற்பாட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல்வேறு அமைச்சுளின் செயற்பாட்டுத் திறனற்ற முன்னெடுப்புகள் காரணமாக குறித்த இலக்கை இதுவரை எட்டமுடியாத நிலையில் இயங்குகின்றன. தற்போது, வெளிநாட்டமைச்சின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக பிரதமரின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் அதே வேளை, வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் மட்டத்திலும் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று கல்வி அமைச்சின் சில நடவடிக்கைளிலும் அண்மைக்காலங்களில் பிரதமர் அலுவலகம் தலையீடு செய்திருந்தது. இதற்கு மேலதிகமாக கல்வி அமைச்சின் தேசிய மட்ட நடவடிக்கைகளை முற்றாக பிரதமர் அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கான முற்கொடுப்பனவு முறை-

highwayகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கான முற்கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அதிவேக வீதி மேற்பார்வை மற்றும் முகாமைத்துவப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் வாகனங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக கருமபீடங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாதென அந்த பிரிவின் பணிப்பாளர் அனுர தம்மிக்க குமார குறிப்பிட்டுள்ளார்.

முற்கொடுப்பனவு முறையின் மூலம் வாகனங்கள் அதிவேக வீதியூடாக தொடர்ந்து பயணத்தை முன்னெடுக்க இயலும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த புதிய முற்கொடுப்பனவு முறையில் தங்களைப் பதிவுசெய்து கொள்வதற்காக வாகனப் பதிவு சான்றிதழின் பிரதி, தேசிய அடையாள அட்டையின் பிரதி மற்றும் சாரதி அனுமதிப்பத்திர பிரதி என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் உண்ணாவிரதப் போராட்டம்-

sdfddfffதமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம மக்கள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாம் நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம மக்கள் நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேப்பாப்பிலவில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மக்களில் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை என்பவர் சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ஏனையோர் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி பல முறைகள் போராட்டங்களை நடத்திய போதிலும், இன்னும் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குடும்பப் பெண்ணின் மருத்துவ செலவுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் ஊடாக நிதியுதவி-

oஒட்டுசுட்டான் முத்து விநாயகபுரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் கலைமதியின் மருத்துவ செலவுக்காக லண்டன் நாட்டைச் சேர்ந்த ஓர் கருணை கொடையாளனால் 20,000 ரூபா வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக நேற்றையதினம்(24..03..2016)வழங்கி வைக்கப்பட்டது. இவரது கணவன் கடந்தகால யுத்தத்தின்போது தனது இடது கையினை இழந்து இரு கால்களிலும் எலும்புகள் முறிந்து மற்றும் நரம்புகள் அறுந்த நிலையில் சத்திர சகிச்சை செய்யப்பட்டு அவரால் சுயமாக இயங்க முடியாத நிலையில் பல இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றவேளை முத்துலிங்கம் கலைமதி அவரையும் இரு பிள்ளைகளையும் நாளந்தம் கூலி வேலை செய்து தனது குடும்பத்தைப் பார்த்து வந்த வேளையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீர் சுகயீனம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு அவருக்கும் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே முத்துலிங்கம் கலைமதியின் மருத்துவ செலவுக்காக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் 21.12.2015 அன்று ரூபா 30,000 மருத்துவ செலவுக்ககா வழங்கிவைக்கபட்டது குறிப்பிடத்தக்கது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

மின்மாற்றி வெடிப்புக்களுக்கு நாசகார வேலை காரணமாக இருக்கலாம்-

transformerநாட்டில் அண்மையில் மின்மாற்றிகளில் ஏற்பட்ட வெடிப்புக்களுக்கு நாசகார வேலைகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது என ஜேர்மனில் இருந்து வந்துள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் பியகம மற்றும் கொட்டுகொட ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக நீண்டநேர மின்சார விநியோகத்தடை ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில் மின்மாற்றி, குழாய் மாற்றிகளின் தன்னியக்க செயற்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை பியகம மின்மாற்றி வெடித்தபோது அந்த நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர் தேனீர் பருகச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபை கூறுவதுபோன்று பணியாளர் குறித்த நேரத்தில் அங்கு இருந்திருப்பாராக இருந்தால் அவர் வெடிப்பின்போது மரணமாகியிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த வெடிப்புக்களுக்கு நாசகார வேலைகள் காரணமாக இருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என்று ஜேர்மன் நிபுணர்கள் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கைக்கு அமெரிக்க கடற்படைக் கப்பல் வருகை-

american shipஅமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யு.எஸ்.எஸ் புளு ரிட்ஜ் (எல்.சி.சி 19) கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 2011 ஒக்டோபர் மாதத்துக்கு பின்னர் இலங்கை வரும் முதலாவது அமெரிக்க கடற்படை கப்பலாக இதுவாகும். கடற்கொள்ளையை எதிர்கொள்ளல், மனிதநேய உதவி வழங்குதல், பிராந்தியத்தின் பிரதானமான கடற்பாதையில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பவற்றுக்கான கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கடந்த மாதம் வொசிங்டனில் நடைபெற்ற இருநாட்டு பங்காளித்துவ உரையாடலின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமைகின்றது. ‘சிறந்த நிலைத்திருத்தல் தன்மை, பாதுகாப்பு, செழுமை மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கினை போஷிப்பதற்கு அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான உறுதியான உறவானது உதவி புரியும்’ என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் தெரிவித்தார். ‘இலங்கை போன்ற பிராந்திய பங்காளர்களுக்கான அமெரிக்காவின் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாக இந்த அமெரிக்க கடற்படை கப்பலின் விஜயம் அமைந்துள்ளது’ என அவர் மேலும் குறிப்பிட்டார். Read more

கம்உதாவ திட்டம் மீண்டும் உதயம்-சஜித் பிரேமதாச-

gam udawaகம்உதாவ வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அது தொடர்பில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. கம்உதாவ வேலைத் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 5 ஆண்டுகளில் 25 மாவட்டங்களிலும் வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். அதன்படி இந்த ஆண்டு புதிய கம்உதாவ வேலைத்திட்டம் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் யோசனையில் கம்உதாவ திட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் அது தேசத்திற்கு மகுடம் என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டது. அனைத்து கம்உதாவ திட்டங்களின்போது இதற்கு முன்னர் போன்று கலாச்சார ரீதியான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதோடு, அதற்கான நிதியை தனியார் நிறுவனங்களினுடாக பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால் செலவிடப்படும் நிதி, வீடுகளை நிர்மாணிப்பதற்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மாத்திரம் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் பற்றிய உண்மைகளை கண்டறிவது மிக முக்கியமானது-சந்திரிகா குமாரதுங்க-

chandrikaபோர் பற்றிய உண்மைகளை கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை நோக்கி முன்நகர வேண்டுமாயின் போர் பற்றிய பின்னணி மற்றும் அது குறித்த ஏதுக்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உண்மை அறியும் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உண்மையை கண்டறியும் பொறிமுறைமையை சீர்குலைப்பதற்கு சில அரசியல் தலைமைகள் முயற்சித்து வருகின்றனர். போரின் பின்னரும் போரின் போதும் சில அரசியல் தரப்புக்கள் மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தவே முயற்சித்து வருகின்றனர். போர் காரணமாக உறவுகளைப் பிரிந்தவர்கள் காணாமல் போனவர்கள் வடக்கு கிழக்கில் மட்டும் இல்லை, தெற்கிலும் இருக்கின்றார்கள். புதிய அரசாங்கம் உண்மையைக் கண்டறிவது தொடர்பிலான பொறிமுறைமையை உருவாக்கி வருகின்றது. கடந்த காலங்களில் வெறுமனே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிப்பு-இராணுவப் பேச்சாளர்-

jeyanath vijeweeraஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் 24 மணித்தியாலங்களும் கண்காணித்து வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

பிரஸெல்ஸ் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பில் கூறுகையில், இராணுவப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரஸெல்ஸ் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பூர் மீள்குடியேற்ற மக்களுக்கு வீடுகள் கையளிப்பு-

dsfdfdfதிருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (25.03.2016) வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது 18 பயனாளிகளுக்கு கனடா தமிழ்ப் பேரவையினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பொதுமக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 2006ம் ஆண்டு அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு தற்போது சொந்த வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீனவர் பிரச்சினை குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்தியாவில் பேச்சு-

mahindaஇலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவிற்காக விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மே மாதம் நடுப்பகுதியில் இந்தியா நோக்கி விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் அமைச்சரின் இந்த விஜயம் அமையவுள்ளது.

கண்ணீர் அஞ்சலி

Posted by plotenewseditor on 24 March 2016
Posted in செய்திகள் 

கண்ணீர் அஞ்சலி

அன்னை மடியில்: 01.01.1930 இறைவன் மடியில்: 20.03.2016

sfdfd

அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி மற்றும் சுவிஸ்லாந்தின் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட (இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார்) அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினுடைய செயற்பாடுகள் சிறப்புற அமைவதற்கு அறிவுரைகளையும், உதவிகளையும் வழங்கியவர் என்பதோடு. எமது செயற்பாடுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தவர்.

சுவிஸ் கிளையினால் நடாத்தப்படும் பல்வேறு நிகழ்வுகளுக்கும், குறிப்பாக மாணவர்களுக்கான பரீட்சைப் போட்டீ நிகழ்வுகளுக்கு பூரண ஆதரவும், ஆலோசனைகளையும் வழங்கி உதவிகள் பலவும் செய்தவர்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினராகிய நாமும் இப் பெருந்துயரரினைப் பகிர்ந்துகொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.

துயர் பகிர்வு

கழகப் பணிகளிலே கண்ணியமாய் நின்று

ஊக்கமும் உறுதுணையும் தந்தவரே!

தேசத்தின் நலனில் நேசம் கொண்டதனால்

தாய் நிலத்திலும் புலத்திலும்

தன் பணியை தளராது செய்து காட்டிய சேவகரே!

உங்கள் பிரிவென்பது எமக்கு

பெரும் பெருந்துயரைத் தருகின்றது

எம் நேசத்திற்குரியவரே!

விதை முளைத்தால் அது மரம்

மரம் இறந்தால் அது மண்ணுக்கு உரம்

எமக்கு இழப்பு பெரிதாகிலும்

இயற்கையின் நியதியை

மாற்றமுடியாது என்ற எதிர்வினையோடு

மாறாத் துயர் சுமந்து அஞ்சலித்து நிற்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T.E)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F)
சுவிஸ் கிளை – 24.03.2016plote

நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது-பாதுகாப்புச் செயலர்-

karunasenaசர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி, நாட்டின் பாதுகாப்பு குறித்து விஷேட வேலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை அனுப்பி கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற சில அனாமதேய அழைப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எது எவ்வாறிருப்பினும் நாட்டின் பாதுகாப்பு தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலர் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

வவுனியாவில் இராணுவக் குடியிருப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

npc2_CIவவுனியாவில் இராணுவத்தினருக்கு குடியிருப்பு வீடுகள் நிர்மாணிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தம்முடன் முன்னரே கலந்தாலோசிக்கவில்லை என்பதால், இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களால் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தின் கருப்பொருளின் நியாயத்தன்மையைக் கருத்திற்கொண்டு இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என்றனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று நடைபெற்ற போதே, சபை மண்டபத்தில் உறுப்பினர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

கொழும்பில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அமர்வு-

tpaதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பிலுள்ள தமிழ் மக்களின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயற்பாடு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள தமிழ்ச் சங்கம் மண்டபத்தில் நடைபெறும் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரையும் வருகை தந்து தமது கருத்துக்களை முன்வைக்குமாறு தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, மிக விரைவில் தீர்வுத்திட்ட முன்மொழிவு முழுமையாகத் தயாரிக்கின்ற பணி ஆரம்பிக்கப்படவுள்ளதால், எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் pழடவைiஉயடளரடி;வயஅiடிநழிடநளஉழரnஉடை.ழசப என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது ூ94 75 6993211என்ற இலக்கத் தொலைபேசி ஊடாகவோ அனுப்பிவைக்குமாறு தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழ். கண்காட்சியில் பிரபாகரனின் கைவிரல் அடையாளம்-

adsdsssஇலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் சாட்சியங்கள் இரண்டாவது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.யாழ். பொது நூலகத்தின் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

கடந்த 6 தசாப்தங்களுக்கு முன்னால் இருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய அரிய புகைப்படங்கள், இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமான மத்திய வங்கி மீதான குண்டுத்தாக்குதலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கைவிரல் அடையாளங்கள் என்பனவும் இந்தக் கண்காட்சியில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரவி கருணாநாயக்க மற்றும் ஜோன் அமரதூங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை-

raviநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 37பேர் கையெழுத்திட்ட குறித்த பிரேரணை, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனை அடங்களாக பாராளுமன்றத்தில் தவறான தகவல்களை வழங்கியமை போன்ற காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் முன்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமைச்சர் ஜோன் அமரதூங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக, மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி கூறியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் பாராளுமன்றத்தில் நேற்று வினவிய கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பிழையான தகவல்களை வழங்கியுள்ளதன் மூலம், பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக, மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

விழிநீர் அஞ்சலி – அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள்-

adsdsயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி மற்றும் சுவிஸ்-சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயநாதன் (இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார்) அவர்கள் (20.03.2016) ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச்சில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். 

அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள் கழகத்தின் சுவிஸ் கிளையின் பணிகள் சிறப்புற அறிவுரைகளும், ஊக்கமும் தந்தவர் என்பதோடு, கிளையின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாய் நின்று உதவிகளையும் வழங்கியவர்.

அவர்தம் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

plote

மரண அறிவித்தல்

vijanathanஅமரர். வைத்திலிங்கம் விஜயநாதன்

அன்னை மடியில்: 01.01.1930            இறைவன் மடியில்: 20.03.2016

இலங்கை சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி மற்றும் சுவிஸ்-சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயநாதன் (இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார்) 20.03.2016 ஞாயிறு அன்று சூரிச்சில் சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம்-இராசம்மா அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்ற  குமாரசாமி-செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

இவர் தங்கமுத்து அவர்களின் அன்புக்கணவரும்,

விஜயகுமார்(இலண்டன்), இரத்தினகுமார்(சுவிஸ்-சூரிச்), திருமதி சி.ஜெயகுமாரி(இலண்டன்), திருமதி ம.உதயகுமாரி(கனடா) மற்றும் திருமதி சா.வனஜாகுமாரி(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவர் திருமதி வி.சுபத்திரா, திருமதி இ.புனிதமலர், திரு.சிவகுமாரன், திரு.மனோகரன், மற்றும் திரு சாய்ரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுஷா, ஆனந்த், சங்கீர்ணன், பகீர்ணன், கேதாரணி, செந்தூரன், சுகந்தி நிருத்திகா, நிஷாந்தன், சகானா, கீர்த்தனா, ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான திரு முத்தையா,  திருமதி.மகேஸ்வரி, திருமதி.தையல்நாயகி, திருமதி.ச.சிவபாக்கியம்(சுவிஸ்-லுசேர்ன்), பரமேஸ்வரி, கமலாதேவி, கமலாசனி (கனடா), சுந்தரலிங்கம், நடராசா, திரு.பஞ்சாட்சரம் (டென்மார்க்) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திரு.சந்திரசேகரம், திரு இரத்தினம், திருமதி செல்லமுத்து, மற்றும் திரு வேலுப்பிள்ளை(கனடா), திருமதி தேவரத்தினம்(சுவிஸ்-லுகானோ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.
தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு :  செவ்வாய் 22.03.2016, புதன்கிழமை, 23.03.2016
இடம் : Kramatorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich. (Bucheggplatz.)
காலை 08.30-11.30, நண்பகல்  13.30-16.30 மணி

ஈமைக்கிரியைகள் : வியாழன், 24.03.2016,
இடம்: Kramatorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich. (Bucheggplatz.)        காலை 08.00 – 10.30

தொடர்புகளுக்கு…

வி.இரத்தினகுமார் 044 463 89 01 / 044 463 94 81 / 079 311 55 29
விஜயகுமார்(இலண்டன்) 1044 20 8949 2669
திருமதி சி.ஜெயகுமாரி(இலண்டன்) 1044 205490499
திருமதி ம.உதயகுமாரி(கனடா) 101 416 299 51 43
திருமதி சா.வனஜாகுமாரி(இலண்டன்) 1044 208 64 61 674

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு-

airportபிரசல்ஸில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டிருப்பதாக அந்த அதிகார சபை கூறியுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் விமான நிலைய பாதுகாப்பு சம்பந்தமாக வௌ;வேறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் எனினும் நேற்றைய தினம் முதல் விமான நிலையத்திற்கு மேலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகார சபை கூறியுள்ளது. பயணிகளின் அனைத்துப் பயணப் பொதிகளும் பல இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன்மூலம் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பயணிகள் தொடர்பில் தாம் மனம் வருந்துவதாகவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை கூறியுள்ளது.

சம்பூரில் 177 ஏக்கர் காணிகள் விடுவிப்பு-

sampoorதிருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடற்படை வசமிருந்த 177 ஏக்கர் காணிகளை விடுவித்து, அவை நாளை மறுதினம் பொதுமக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படும் காணியில் மொத்தமாக 546 குடும்பங்கள் மீள்குடியேறவுள்ளன என திருமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான என்.ஏ.ஏ. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதன்போது, சம்பூர் மகா வித்தியாலயம் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்படும். இக் காணிகளை மக்களுக்கு கையளிக்கும் வைபவம் வெள காலை 10 மணிக்கு சம்பூரில் நடைபெறவுள்ளது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமரின் பயணத்தை ஒளிப்பதிவு செய்தவர் கைது-

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாகனப் பயணத்தை தமது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த இளைஞன் ஒருவர் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பிரதமர் கொள்ளுப்பிட்டி வழியாக சென்றுகொண்டிருக்கும்போது, குறித்த இளைஞன் அதனை ஒளிப்பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதானவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, விசாரணைகளைத் தொடர்ந்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாஜூடினின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு-

tajudeenபடுகொலை செய்யப்பட்ட றக்பி வீரர் வசிம் தாஜூடினின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய தினம் இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேலதிக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வழக்கு தொடர்பான முழு அறிக்கைகையும் விரைவில் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை-

afghan_isisஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை இலங்கையிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் துணை அமைப்பான ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பில் மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த பலர் இணைந்து கொண்டுள்ளதாகவும் ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது

இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் கட்டியெழுப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். உலகில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் கட்டியெழுப்படுவதற்கான அடிப்படையாக இருக்கும் வழிகளை மூட வேண்டும். மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் அதிகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக உலக செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. Read more

பெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள், 34 பேர் உயிரிழப்பு-

sfdfddfdddபெல்ஜியம், பிரஸ்ஸல்ஸில் உள்ள சவென்டம் விமான நிலையத்துக்கு வெளியே இடம்பெற்ற இரண்டு வெடிப்பு சம்பவங்களில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் 170 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் வெளிநாட்டு செய்தி தெரிவிக்கின்றது. வெடிப்பு சம்பவமொன்றையடுத்து விமானநிலையத்தின் நுழைவாயிலிலிருந்து கரும்புகை மேலெழும்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் மறுஅறிவித்தல் வரும்வரையிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தற்கொலைப்படை தாக்குதல் என்று அந்த நாட்டு அரசு உறுதிப்படுத்தியது. இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரஸல்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்றும், தாக்குதல் சம்பவங்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் இருக்கும் இலங்கையர்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு 003223445585 அல்லது 0032471872745 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதலை அடுத்து ஜாவுன்டெம் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. Read more