வவுனியாவில் நெற்களஞ்சியசாலைகள் பாதுகாப்பு தரப்பினரால் விடுவிப்பு-

stfவவுனியாவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்த இரண்டு நெற்களஞ்சியசாலைகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. 1997ஆம் ஆண்டில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த இரு நெற்களஞ்சியசாலைகளையும் முகாமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த இரு களஞ்சியசாலைகளையும் மீண்டும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்த கோரிக்கையை அடுத்து இன்று அவை விடுவிக்கப்பட்டன. வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இன்று அங்கு சென்று களஞ்சியசாலைகளைப் பார்வையிட்டனர். இந்த இரு நெற்களஞ்சியசாலைகளிலும் 3000 மெட்ரிக்தொன் நெல்லைக் களஞ்சியப்படுத்த முடியுமென கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்டவை 10 வருடங்கள் பழைமையானவை-

werererrerயாழ். சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் புலிகளினால் போர்க் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்டவை எனவும், எனினும் இவ் வெடிபொருட்கள் தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கைதான முன்னாள் புலி உறுப்பினர் கொழும்பு தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தபட்டு வருவதாகவும், குறிப்பிட்ட நபரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட சந்தேகத்துக்கிடமான இலக்கங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.

குடிவரவு, குடியகல்வு திணைக்கள உடமைகளுக்கு சேதம் விளைவிப்பு-

567676முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு – புஞ்சிபொரளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தடியடி மேற்கொண்ட பொலிஸார், அவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டுள்ளனர். புஞ்சிபொரளையில் அமைந்துள்ள குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் அத்துமீறி திணைக்களத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அங்குள்ள உடமைகளுக்கு சேதம் விளைவித்த நிலையிலேயே, அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் தடியடி மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தால், அப்பகுதியில் பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு விஜயம்-

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் சீனாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 06ம் திகதி முதல் 09ம் திகதி வரையில் பிரதமரின் இந்த விஜயம் அமையவுள்ளது. சீன பிரதமர் லீ கெகியாங்கின் அழைப்பின் பேரில் இலங்கை பிரதமரின் இந்த விஜயம் அமையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை மற்றும் பொதுவாக அவதானம் செலுத்த வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் நீண்ட காலமாக காணப்படுகின்ற நட்புறவை மேம்படுத்துவதற்கு இந்த விஜயம் முக்கியமானதாக அமையும் என்று பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக மனுத்தாக்கல்-

courts (2)தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நியமனம் சட்டவிரோதமானது என தெரிவிக்குமாறு கோரிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினரால் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்ல என்று உத்தரவிடுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் படி தேசிய அரசாங்கமாக கருதப்படுவது, பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொண்ட கட்சியுடன் ஏனைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அமைக்கும் அரசாங்கத்தையே. எனினும் தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்ல என்பதுடன் அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டதாகவே இருக்க வேண்டும் என்று மனுதார் கூறியுள்ளார்.