தமிழ் தேசத்தின் அடிப்படை உரித்துக்களுக்கான அங்கீகாரம் வலியுறுத்தப்பட வேண்டும் – தர்மலிங்கம் சித்தார்த்தன்

sithadthanஇன்றைய இலங்கை அரசியல் போக்கு, இரு பெரும் சிங்களத் தேசியக் கட்சிகளும் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சரித்திர வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த அரசாங்கத்தை அமைத்ததில் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களுமே முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார்கள். இலங்கையின் நாடாளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டு, இந்த நாட்டிற்காக புதிய ஓர் அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது போலத் தென்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்பிலிருந்து, ஒருமித்த குரலாக, தமிழ் தேசத்தின் அடிப்படை அரசியல் உரித்துக்களுக்கான அங்கீகாரம் கோரப்பட வேண்டும்.

கடந்த கால வரலாற்றில், சூழலுக்கு ஏற்றவிதமாகத் தத்தமது போராட்ட வடிவங்களில் ஒவ்வாரு தமிழ் கட்சியும் எத்தகைய மாறுதல்களைச் செய்திருந்தாலும் – இன்று பிறந்திருக்கின்ற இந்தத் தனித்துவமான அரசியற் சூழலில் – தமிழ் தேசத்தின் அடிப்படையான அரசியல் உரிமைகள் வலியுறுத்தப்பட வேண்டும் என்பதும், அவற்றில் எத்தகைய விட்டுக்கொடுப்பையும் செய்ய முடியாது என்பதுவே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய எமது கட்சியினது நிலைப்பாடு ஆகும் என்று தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்” கட்சியின் ஐந்தாவது பேராளர் மாநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசன் பவன் இந்த வாழ்த்துச் செய்தியை மாநாட்டு அரங்கில் வாசித்தார்.

இந்த வாழ்த்துச் செய்தியில் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவித்திருப்பதாவது:
இந்த மாநாடு நிறைவாக நடந்தேற, எமது இயக்கமான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும், எமது இயக்கத்தின் அரசியற் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சார்பாக நான் உளமார வாழ்த்துகின்றேன்.

பிரித்தானிய ஆட்சியிடமிருந்து இலங்கை முழுமையாக விடுபடுவதற்கு முன்னர் தொட்டே இலங்கையின் அரசியலானது – இன, மத, மொழி வாதங்களை முன்வைத்தே சிங்களத் தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது என்பது வரலாறு.

பல்லினச் சமத்துவத்தைப் பேணி, நாட்டு மக்களை நற்பிரசைகளாக வழிநடத்தியிருக்க வேண்டிய அரசாங்கத் தலைமைகளே – இனம், மதம், மொழியின் அடிப்படையில் குடிமக்களைக் கூறுபோட்டு கையாண்டதன் நேரடி விளைவுகளும் பக்க விளைவுகளும் தான் கடந்த கால அழிவுகளும் துயர அனுபவங்களும் ஆகும்.

ஒன்றுபட்ட நாட்டிற்குள், ஏனைய மக்கள் குழுமங்களுடன் சமத்துவமாக வாழத் தலைப்பட்ட தமிழ் மக்களது உரிமைகள் மட்டும் குறிவைத்து மறுக்கப்பட்ட போதுதான், தவிர்க்க முடியாத வரலாற்று விளைவாக தமிழ் தேசிய இன உணர்வு கூர்மைப்பட்டது. கால ஓட்டத்தில், தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக முன்னெடுத்த மென்முறை தழுவிய எதிர்ப்புப் போராட்டங்களும் நசுக்கப்பட்ட போது – தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படும் போது மட்டுமே, கௌரவமான ஓர் அரசியல் வாழ்வு தமிழ் மக்களுக்கு உறுதிப்படும் என்ற உண்மை நிரூபனம் ஆனது.

விளைவாக – அரசியல் உரிமைகளுக்கான தமிழ் மக்களின் போராட்டம், மேலும் எழுச்சியுற்று, ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு இயங்கங்கள் தமது பிறப்புக்களை எடுத்தன. எமது இயக்கம் தோன்றியதும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைத் தோழன் பத்மநாபா தோற்றுவித்ததும், தம்பி பிரபாகரனுக்குப் பின்னால் பல பத்தாயிரம் தமிழ் இளைஞர்கள் திரண்டெழுந்ததும் – மறக்கடிக்கப்பட விடமுடியாத எமது இனத்தின் சரித்திரத்திரப் பதிவுகள். ஆனாலும், 30 ஆண்டு காலம் நீடித்த ஆயுதப் போராட்டம், அழிவுகளுக்குள் சிக்குண்ட ஒரு சமூகத்தையே மீதமாக விட்டுச் சென்றுள்ளது. இந்த நிலைக்கு நாம் எல்லோருமே பொறுப்பு ஆகின்றோம். இருந்தாலும், இந்த வரலாற்று அனுபவத்திலிருந்து நிறைய பாடங்களை நாம் கற்றுக்கொண்டுவிட்டோம்.

“பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்” கட்சியானது தமிழ் தேசிய உணர்வை மட்டுமல்லாது, சமூக – பொருளாதார – பால் வேறுபாடுகளுக்கு எதிராகவும் குரலெழுப்பி, தன்னை ஓர் மக்கள் இயக்கமாகவும் தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது. எமது கட்சியும் “பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்” கட்சியும் பல்வேறு அரசியல் தளங்களில் இணைந்து செயற்பட்டு வந்ததும், தொடர்ந்தும் செயற்பட்டுவருவதும் வெளிப்படையானது. எமது மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளில் எத்தகைய விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாது – அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒருமித்துப் பணியாற்ற ஒரு பொதுத் தளம் அவசியமானது. அத்தகைய ஒரு பொதுத் தளத்தை உருவாக்க நாம் அனைவரும் கூட்டுச் சிந்தனையுடன் முயற்சிக்க வேண்டும்.

“பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்” கட்சியானது – “தமிழர் சமூக ஜனநாயக் கட்சி” என்ற புதிய பெயருடனும், புதிய உத்வேகத்துடனும் தொடரவுள்ள பணிகள் அனைத்தும் சிறப்புற்று வெற்றியடைய, நான் மனமார வாழ்த்துகின்றேன்.