இலங்கை அரசின் நல்லிணக்கச் செயற்பாடு நத்தை வேகத்தில்-த.சித்தார்த்தன் எம்.பி-
P1360383இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடு மிகவும் நத்தை வேகத்தில் செல்கிறது. அத்துடன் அரசியல் அமைப்பு மாற்றமானது ஒரு கேள்விக்குறியான விடயமாகவே இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 
மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்ததன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்தக் கருத்தினை அவர் வெளியிட்டார். 
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
நல்லிணக்கச் செயற்பாடுகளில் பல விடயங்களில் பேரினவாதிகள் மிகக் கவனமாகச் சிந்திக்கிறார்கள். போர் நிறைவடைந்தபோது 12ஆயிரம் விடுதலைப் புலிகளை புனர்வாழ்வளிப்பின் பின்னர் மகிந்த ராஜபக்ச விடுவித்திருந்தார். இருநூறு வரையானவர்களை, அதுவும் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடாதவர்கள் சிறையில் இருக்கின்றார்கள். அதிகமானவர்கள் உதவியவர்களே இருக்கிறார்கள். இவர்களை விடுவிப்பதில் அரசிற்கு பெரும் பிரச்சினையிருக்கிறது. 12ஆயிரம் பேர் செய்யாத புரட்சியை இந்த இருநூறு பேர் செய்யப்போகிறார்களா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகின்றது. அந்த வகையில் பேரினவாதத்துக்குப் பயந்த ஒரு செயற்பாடு, அரசியல்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. 

அரசியலமைப்பு மாற்ற விடயம் என்னைப் பொறுத்தவரையில் ஒரு கேள்விக்குறிதான். அரசியல் நிர்ணய சபையாக மாற்றுவதற்கான முன்னுரையில் உள்ள ஜனாதிபதியின் விடயம், தேர்தல் முறை மாற்றம், 3ஆவதாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் என்கிற வசனம் அந்த இடத்தில் இருக்குமானால் சிங்கள மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதற்காக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மகிந்தவுடன் இருப்பவர்கள், தற்போது அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்களும் ஒரு திருத்தப் பிரேரணையைக் கொண்டு வந்தார்கள். அதனை அரசு ஏற்றுக் கொண்டது. 

தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்தல் என்ற வசனத்திலேயே பிரச்சினை இருக்கிறது என்றால் எவ்வாறு?. அந்த வகையில் தான் சொன்னேன் கேள்விக்குறி என்று. அதற்காக உடனடியாக எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தோம் என்றில்லாமல், கடைசி வரையில் முயற்சித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் நாம் விலகி நின்று தீர்வு வராமல் போனது என்ற குற்றச்சாட்டு இருக்கக் கூடாது என்று நினைக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.