வடமாகாண அமைச்சர்களை நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கையெழுத்து வேட்டை-
வடமாகாண சபை அமைச்சர்கள் அனைவரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரிய விண்ணப்பத்தில் இதுவரை 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் 4 அமைச்சர்கள் நீங்கலாக மொத்தம் 24 உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடவிருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப் பொருளாளரும், வடமாகாண சபை பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வட மாகாண சபைக்கான தேர்தல் முதன்முறையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தெரிவான உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதோடு, அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். அமைச்சர்களின் பதவிகள் எதிர்வரும் 11ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றன. அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்களேயொழிய மக்களுக்கான சேவை வழங்குவதில் அவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளவில்லை என்ற அதிருப்தி காணப்படுகின்றது. எனவே எஞ்சிய ஆண்டுகளிலாவது மக்களுக்கு அர்த்தபுஷ்டியுள்ள சேவையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த ஜனநாயகபூர்வமான கையெழுத்து வேட்டையை ஆரம்பித்தோம். இதற்கமைய, பதவிகளிலுள்ள 4 அமைச்சர்களும் மாற்றப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கான பிரதிநிதித்துவம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும், அவைத்தலைவர், பிரதி அவைத்தலைவர் பதவிகளில் மாற்றம் கொண்டுவர முடியுமாயின் அதிலும் மாற்றத்தை கொண்டுவருவது அவசியம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் முல்லைத்தீவு முன்னிலை வகிக்கின்றது. எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுப் பதவி ஒன்றுகூட வழங்கப்படவில்லை. எனவே இந்த மாவட்டத்திற்கு ஓர் அமைச்சு வழங்க வேண்டும். இந்த 3 கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தில் இதுவரை 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதோடு, நாளை மறுதினம் 6 உறுப்பினர்கள் கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் இறுதி வடிவம் நாளை மறுதினம் கூடவுள்ள வடமாகாண சபை அமர்வின்போது முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது யாருக்கும் எதிரான விண்ணப்பம் அல்ல. ஜனநாயக ரீதியிலான கோரிக்கையாகும் என்றார்.