அனல் மின் நிலையத் திட்டத்தால் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு-
வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் செய்யப்பட்டுவந்த விறகு வெட்டுதல், தேன் எடுத்தல், வேட்டையாடுதல், விவசாயம் போன்ற தொழில்கள் இந்த அனல் மின் நிலையம் அமைப்பதினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும்; சம்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத் திட்டத்தைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதைக் கண்டித்து சந்தோசபுரம், கிறேவற்குழி சிவசக்தி வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பசுமை திருகோணமலை அமைப்பு மற்றும் இலங்கை பழங்குடியினர் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ‘நிலக்கரியை எரித்து எம்மை நோயாளி ஆக்காதே’, ‘எங்களின் விளை நிலங்களை நாசம் ஆக்காதே’, ‘எமது சூழலை பாதிக்கும் அனல் மின் நிலையத்தை ஆரம்பிக்காதே’ உள்ளிட்டவை எழுதப்பட்ட பதாதைகளை பொதுமக்கள் தாங்கியிருந்தனர். ஆர்ப்பாட்ட இறுதியில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரனிடம் பசுமை திருகோணமலை அமைப்பினர் கையளித்துள்ளனர்.
போர்ட் சிட்டி மூலம் இயற்கைக்கு பாதிப்பில்லை-பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன-
கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்படவுள்ள போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம் இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒரு வருடமாக போர்ட் சிட்டி நிர்மாணப்பணிகளை இடைநிறுத்தியமைக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்க வேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ள சீன விஜயத்தில் நட்டஈடு வழங்குவதா அல்லது அதனை முற்றாக தடை செய்வதா என்பது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.. அத்துடன், போர்ட் சிட்டி அமைப்பு மற்றும் அது குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த போர்ட்சிட்டி அமைப்பிற்கு பாரிய அளவில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தாலும் அச்சம் கொள்ளுமளவிற்கு அதனால் எந்த விதமான பாதிப்பும் இல்லை. இந்நிலையிலேயே போர்ட் சிட்டி நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, போர்ட் சிட்டியில் மாடிவீடுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன மேலும் கூறியுள்ளார்.
இலங்கை நல்லிணக்கம் தொடர்பில் அமெரிக்கா ஆராய்வு-
சர்வதேச குற்றவியல் நீதிக்கான இராஜாங்க அலுவலகத்தின் அமெரிக்க திணைக்களத்தின் விசேட ஒருங்கிணைப்பாளர் டொட் புச்வேல்ட், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிற்கான இராஜாங்க திணைக்களத்தின் பிரதி உதவி மேலாளர் மன்பிரீட் அனன்டும் இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவு செய்துள்ளனர். அவர்கள் நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் அரசாங்க மற்றும் அரசியல் தலைவர்கள், நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் தலைவர்களையும் சந்தித்து நாட்டின் நல்லிணக்க சூழ்நிலை குறித்து அறிந்து கொண்டுள்ளனர். இலங்கை மக்கள் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களையும், சமாதானம் செழிப்பு மற்றும் நல்லிணக்கம் நிலவுகின்ற எதிர்காலத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்த தருணத்தில் இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உதவ முயல்வதாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் கூறியுள்ளார். இலங்கையின் நிலை குறித்து முன்நோக்கி வழங்கக்கூடிய பல்வேறு தரப்பினரின் குரல்களை செவிமடுக்க முடிந்தமை பயனுள்ளதாக அமைந்ததாகவும், தாம் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு காணப்படும் நிலைமை குறித்து அறிந்து கொண்டதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிக்கான இராஜாங்க அலுவலகத்தின் அமெரிக்க திணைக்கள விசேட ஒருங்கிணைப்பாளர் டொட் புச்வேல்ட் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார தினம் இன்று-
உலக சுகாதார தினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி உலக சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார தினமாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த வருடத்தின் சுகாதார தினத்தின் தொனிப் பொருளாக நீரிழிவு நோய்த் தடுப்பு முன்னெடுக்கப்படுகின்றது. நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு, நீரிழிவிலிருந்து தப்புதல் மற்றும் உறுதிப்பாடு ஆகியன இந்த வருட சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது. உலகம் முழுவதிலும் 422 மில்லியன் பேர் நீரிழிவு தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் மக்கள் தொகையில் 11.5 வீதமானவர்கள் நீரிவினால் அவதியுறுவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக உணவுப் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
புலிகளின் தொப்பி கொழும்பில் கண்டுபிடிப்பு-
புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட புலிகளின் தொப்பி ஒன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் விரைவு அஞ்சல் பணியகம் (கொரியர் சேர்விஸ்) ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த தொப்பி அடங்கிய பொதி நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பொதியிலிருந்து ரின்மீன், ஆடைகள் மற்றும் குறித்த புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியையும் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பொதி வவுனியாவில் இருந்து மோதரைக்கு வந்துள்ளது, ஆனால் அந்தப் பொதியில் எந்தவிதமான பதிவு இலக்கங்களும் இல்லாத காரணத்தினால் நாரஹேன்பிட்டியில் உள்ள தலைமை காரியாலயத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. குறித்த பொதியில் பதிவு இலக்கங்கள் காணப்படாத காரணத்தினால் அப் பொதியை தலைமை காரியாலய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்வையிட்டுள்ளனர். இதன்போதே குறித்த பொருட்களுடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை கண்டு நாரஹேன்பிட்டி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த பொருட்களை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீன தொழிற்கட்சி அமைச்சர் சந்திப்பு-
சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனத் தொழிற்சங்கக் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சோங் தாவோ அவர்களை அவரது விருந்தினர் இல்லமான டியவோயூடாயில் இன்றையதினம் காலை 11.30 மணிக்குச் சந்தித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடனும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் உள்ள நீண்டகால நட்புறவினை வரவேற்ற சோங் தாவோ, நான்காவது முறையாக இலங்கையின் பிரதமராகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதனை வரவேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இரட்டை உறவுகளான அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சீனத் தொழிற்சங்கக் கட்சிக்கும் இடையிலான உறவு ஸ்திரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் ஓய்வுபெறுகிறார்-
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று அறிவித்துள்ளார்.
இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி, அண்மையில் உருவாகிய பொலிஸ் மா அதிபர்களுள் அனைவருக்கும் முன்மாதிரியாக தனது பதவியின் கௌரவத்தை பாதுகாத்து பணியாற்றிய ஒரு பொலிஸ் மா அதிபராக என்.கே.இலங்ககோன், வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்’ என்று கூறியுள்ளார். சுமார் ஐந்தாண்டு காலம் பொலிஸ் மா அதிபராக அளப்பரிய சேவையாற்றிய இலங்ககோனுக்கு, ஜனாதிபதி இதன்போது வாழ்த்து தெரிவித்து, அவரது சேவையைப் பாராட்டியுள்ளார். இந்நாட்டின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக சேவையாற்றிய என்.கே. இலங்ககோன், எதிர்வரும் 11ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அகதியை துஷ்பிரயோகம் செய்த இந்திய பொலிஸார்-
தமிழகத்தின் மண்டபம் பிரதேசத்தில் இலங்கை அகதிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பொலிஸாரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த 19 வயது பெண்ணை நால்வர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். தற்போது இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில்
அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பரமேஸ்வரி வழக்குப் பதிந்து தப்பி ஓடிய நால்வரையும் தேடி வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஸ்சேவை குறித்த முறைப்பாடுகளை 1955க்கு சொல்லுமாறு அறிவிப்பு-
தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் 1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ அல்லது 011-2333222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடல், பற்றுச்சீட்டு பெற்றுக்கொடுக்காமை, உரிய பாதையில் பயணிக்காது குறுக்கு வீதிகளினூடாகப் பயணித்தல் போன்ற குற்றங்களை, பஸ் நடத்துனர்கள் மேற்கொள்வார்களாயின், அவை தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்யலாம். இதேவேளை, ஊர்களுக்குப் பயணிக்கும் மக்கள், குழுக்களாகச் சேர்ந்து பயணிக்க வேண்டுமாயின், அது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.