இலங்கை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும்-வடக்கு முதல்வர்-

vigneswaranஇலங்கை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. அதில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் தன்னாட்சி அலகும், தென்னிலங்கையில் மலையக மக்கள் ஓர் அலகாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை முன்மொழிகளை சமர்ப்பித்துள்ளது. இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் நிலையில் அதற்கான முன்மொழிவாக இந்த பிரதான விடயம் இன்று வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டது. இதனைத்தவிர ஒற்றையாட்சிக்கு பதிலாக சமஷ்டி முறை அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பிரஜை ஒருவர் மற்றுமொருவருக்கு கீழானவர் என்ற முறைமை மாற்றப்பட வேண்டும். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்ககூடிய ஒரு இனம் மற்றைய இனத்தை விட கூடிய பயனை கோர கூடாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபை உருவாக்கப்படும். இந்த தன்னாட்சி பிராந்தியத்தின் நிலை பரிமாணம் மற்றும் நியாயாதிக்கம் என்பன தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளால் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்படும். மொழி ரீதியிலான தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மாநிலமானது மாநில நாடாளுமன்றம் ஒன்றை கொண்டிருக்கும். இதேபோன்ற ஒழுங்குகள் சிங்கள மொழி மூலமான மாநிலத்தில் மலையக தமிழர்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகாரம் ஒரு சமூகத்திற்கு மட்டும் பகிரப்படாது, அனைத்து சமூகத்திற்கும் பகிரப்படுவதை நாட்டின் நாடாளுமன்றம் உறுதி செய்ய வேண்டும். வடக்கு, கிழக்கு மாநிலம், முஸ்லிம் தன்னாட்சி பிராந்தியம், மலையக தன்னாட்சி பிராந்தியம் ஆகியன பாதிக்கப்படும் வகையில் மத்திய கூட்டாட்சி சமஷ்டி நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் குறித்த மூன்று அலகுகளால் அங்கீகரிக்கப்படும் வரை நடைமுறைக்கு வரக்கூடாது என்றும் வட மாகாண முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாநிலம், வடக்கு, கிழக்கு மாநில நாடாளுமன்றம், வடக்கு கிழக்கு முஸ்லிம் பிராந்திய சபை மற்றும் மலையக பிராந்திய சபை ஆகியவற்றுக்கு முழுமையான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். தமிழ் பேசும் மாநில அரசில் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுநர் என்ற ஒருவருக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்ககூடாது. இலங்கையின் அரச கரும சிங்களமும் தமிழுமாக இருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். வடகிழக்கு மாநிலத்தின் சகல நடவடிக்கைளும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்புடன் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். மலையக தமிழ் பிராந்திய சபை தவிர்ந்த இலங்கையின் ஏனைய பகுதிகளில் பேணப்படும் சகல மொழிகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்புடன் சிங்களத்தில் இருக்க வேண்டும். மலையக பிராந்திய சபையின் பதிவுகள் தமிழிலோ சிங்களத்திலோ இடம்பெறலாம். அதில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிப்பெயர்புகள் பேணப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாநில மற்றும் முஸ்லிம் மலையக தன்னாட்சி சபைகளின் சுயாட்சியானது கூட்டாட்சி அல்லது சமஷ்டி அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாண சபை முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி இறுதி முன்மொழிவு சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனையடுத்து, வடமாகாண சபையின் அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு பேரவையிடம் கையளிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.